பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகைஆற்றில் இறங்கினார்- 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தரிசனம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் கோலாகல நிகழ்ச்சியாக பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார்.
மதுரை,
“கோவில் மாநகர்” என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சிறப்புமிக்க சித்திரைத்திருவிழா கடந்த 5-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது. மீனாட்சி அம்மன் கோவிலில் 12-ந்தேதி பட்டாபிஷேகமும், 13-ந்தேதி திக்குவிஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது.
இதேபோன்று அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.
அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணித்து பாட்டுப்பாடி அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட், வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கே திருமஞ்சனமானார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
இன்று காலை 5.50 மணிமுதல் 6.20 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்தனர்.கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
வைகையில் இறங்கியபின், இன்று பகல் 12 மணிக்கு கள்ளழகர் ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.
அங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடக்கின்றன. காலை 9 மணியளவில் திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷவாகனத்தில் புறப்பட்டு பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பின்பு கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார்.பிற்பகல் 3.30 மணிக்கு அனுமன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது.
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு நாளை இரவு 11 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. 10 அவதாரங்களில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 18-ந்தேதி (திங்கள்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்துடன் பக்தி உலா வருகிறார். அதன்பின் பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நள்ளிரவுக்கு பின் 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 19-ந் தேதி காலை 8.50 மணிக்கு கருப்பணசுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியானவுடன் அழகர்மலைக்கு புறப்படுகிறார். அன்று இரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடக்கிறது. 20-ந்தேதி பகல் 12 மணி அளவில் அழகர்மலையில் இருப்பிடத்தை அடைகிறார்.
Related Tags :
Next Story