4 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கூடாது


4 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கூடாது
x
தினத்தந்தி 16 April 2022 6:41 PM IST (Updated: 16 April 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையேயான 4 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கூடாது என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையேயான 4 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கூடாது என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. அவைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராமதாஸ் மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
4 வழிச்சாலை
சென்னைக்கு தெற்கே சுமார் 162 கி.மீ. தூரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி அமைந்துள்ளது. புதுச்சேரிக்கு சாலைப் போக்குவரத்து வசதியை அதிகரிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு மாமல்லபுரம் -புதுச்சேரி இடையே 107 கிலோ மீட்டர் தூரம் 4 வழிப்பாதையாக வலுப்படுத்தும் முடிவினை எடுத்தது. இதற்காக ரூ.3 ஆயிரம் கோடியும் வழங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இத்திட்டத்தை செயல்படுத்த எல்லா வகையான நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்தது. கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரி அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தபோது புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையேயான சாலை, இந்த நிகழ்வுகள் எல்லாம் புதுச்சேரி மக்களை ஆர்வத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
அதிர்ச்சி
ஆனால் தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவி அளித்த அறிவிப்பு புதுவை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழக அரசு இத்திட்டத்திற்கான ஆட்சேபனை இல்லா சான்றிதழை அளிக்க தயங்குவதால் இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், இதற்கான எல்லா பணிகளும் கைவிடப்படுவதாகவும் அறிவித்தது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வருத்தத்திற்குரியது. கையில் இருந்த ஒரு திட்டம் தங்களிடம் இருந்து நழுவிவிட்டதாக புதுவை மக்கள் கருதுகிறார்கள்.
இதற்கிடையில் தமிழக அரசு இத்திட்டத்திற்கான ஆட்சேபனை இல்லா சான்றிதழை தேசிய ஆணையத்துக்கு சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. இப்பிரச்சினையை தீர்த்துவைத்து மீண்டும் இத்திட்டத்தை தொடர தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆணையிட வேண்டும். இந்த திட்டம் மற்ற மாநிலத்தவரைவிட புதுச்சேரிக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் பயணிகளுக்கு இத்தலம் ஒரு மாற்றுபாதையை அளித்து சென்னை-திருச்சி வழித்தடத்தில் நெரிசலை குறைக்கும்.
காலம் தாழ்த்தாமல்...
மேற்கூறிய பல்வேறு காரணங்களுக்காகவும், பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும் இத்திட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story