பதவிக்காக கவர்னரிடம் ரங்கசாமி சரணாகதி
பதவிக்காக கவர்னரிடம் ரங்கசாமி சரணாகதி அடைந்து விட்டார் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பதவிக்காக கவர்னரிடம் ரங்கசாமி சரணாகதி அடைந்து விட்டார் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
ஆர்ப்பாட்டம்
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை திரும்பப்பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சுதேசி மில் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தலையாட்டி பொம்மை
.புதுவையில் நடந்த காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவிழ்த்தார். அதன்பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்தன.
காங்கிரசில் இருந்து சென்ற 6 பேர்களை வைத்து பிரதமர், உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அதிகாரம், பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள். அதன்பின் அமைந்த புதிய அரசில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலையாட்டி பொம்மையாக உள்ளார்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சூப்பர் முதல்-அமைச்சராக செயல்படுகிறார். பிரதமர் வந்தபோது பெஸ்ட் புதுச்சேரி என்றார். ஆனால் அவர்கள் அறிவித்தபடி கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. சிறப்பு மாநில அந்தஸ்து தரப்படவில்லை. கூடுதல் நிதிகூட ஒதுக்கப்படவில்லை.
கவர்னரிடம் சரணாகதி
நான் முதல்-அமைச்சராக இருந்தபோதுகூட மத்திய அரசிடம் இருந்து 10 சதவீதம் கூடுதல் நிதியுதவி பெற்றேன். ஆனால் இந்த அரசினால் அதைக்கூட பெறமுடியவில்லை. ஊழலைத்தவிர வேறு எந்த வேலையும் நடக்கவில்லை. கர்நாடகாவில் அரசு பணிகளில் 40 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. புதுச்சேரியில் 30 சதவீத கமிஷன் பெறப்படுகிறது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது பதவியின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். நாற்காலியை கட்டியாக பிடித்துக்கொண்டு உள்ளார். அவர் கவர்னரிடம் சரணாகதி அடைந்துவிட்டார்.
இவ்வாறு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Related Tags :
Next Story