இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது - ஓ.பன்னீர்செல்வம்


இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது - ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 17 April 2022 6:24 AM GMT (Updated: 2022-04-17T11:54:58+05:30)

இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 தமிழ் மொழியை வளர்ப்பது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும், குறிப்பாக பிறமொழி பேசுபவர்களை தமிழ் கற்றுக்கொள்ள வழிவகை செய்வது, பிற மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது, தமிழுக்கான இருக்கைகளை தோற்றுவிப்பது, உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தோற்றுவிப்பது போன்றவை ஆகும்.

ஆனால், தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதல்-அமைச்சர் அதைச் செய்யாமல், தன்னை வளர்த்துக்கொள்ளும் பணியில், தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியில், இந்தி மொழியை வளர்த்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வடமாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் தி.மு.க.வால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல்கட்டமாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணைய தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு அண்ணா கூறிய இருமொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தை பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் மும்மொழிக் கொள்கையில் ஒன்றான இந்தியை தி.மு.க. தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

தி.மு.க. அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அ.தி.மு.க. சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story