62 ஆண்டுகளுக்கு பின்பு தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்..!


62 ஆண்டுகளுக்கு பின்பு தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்..!
x
தினத்தந்தி 17 April 2022 8:16 PM IST (Updated: 17 April 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

62 ஆண்டுகளுக்கு பின்பு மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சியை வைகை கரையோரம் புதிய சாலையில் நின்று பக்தர்கள் தரிசித்தனர்.

மதுரை:

மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிப்பதை மையமாகக்கொண்டு தான் சித்திரைத் திருவிழா நடக்கிறது. சாப விமோசன நிகழ்ச்சியானது, வண்டியூர் வைகை ஆற்றின் நடுவில் உள்ள தேனூர் மண்டபத்தில் நடப்பது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த மண்டபம் காலப்போக்கில் சிதிலமடைந்தது. 

இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேனூர் மண்டபம் வைகை ஆற்றின் நடுவே காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. இந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடப்பதில்லை. 

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த மண்டபத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.40 லட்சம் செலவில் தேனூர் மண்டபம் சீரமைக்கப்பட்டது. 

இதையடுத்து 62 ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள பழமையான தேனூர் மண்டபத்தில் இன்று கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு தீப ஆராதனை நடந்தது. இதன்பின் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அதன்பேரில் நாரை பறக்கவிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள், வழக்கமாக வைகை ஆற்றுக்குள் கும்பல் கும்பலாக நிற்பார்கள். இதுவரை தேனூர் மண்டபத்தின் அருகில் வைகை கரையானது, புதர்மண்டிக்கிடக்கும். ஆனால் இந்த ஆண்டு, வைகை வடகரையில் அகலமான சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாப விமோசன நிகழ்ச்சியை பக்தர்கள் இந்த சாலையில் நின்று கண்டு களித்தனர்.


Next Story