வங்கி அதிகாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள்-மடிக்கணினி கொள்ளை


வங்கி அதிகாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள்-மடிக்கணினி கொள்ளை
x
தினத்தந்தி 18 April 2022 1:19 AM IST (Updated: 18 April 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் மடிக்கணினியை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி பொன்னகர் நியூசெல்வநகரை சேர்ந்தவர் லட்சுமண் (வயது 33). இவர் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு விசேஷத்துக்காக குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றனர். அங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேற்று காலை வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்பக்க கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கிடந்தது. வீட்டினுள் மரக்கதவு நெம்பி திறக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமண் வீட்டுக்குள் சென்று அறையில் பார்த்தார்.

ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை

அங்கு பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. லாக்கரில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 13 பவுன் தங்க நகைகள், வெள்ளிக்கொலுசு, பிரேஸ்லெட், மடிக்கணினி, ஹார்ட்டிஸ்க், பென்டிரைவ், ரூ.17 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளைபோய் இருந்தது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

இரும்பு கேட்டின் மீது ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கர்

கொள்ளை நடந்த வீட்டின் முன்புறம் இருந்த இரும்புகேட்டில் சிறிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த ஸ்டிக்கரை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ள வீட்டில் ஒருவேளை ஆட்கள் இருந்தால் இரும்பு கேட்டை திறக்கும்போது, இரு கதவுகளுடன் இணைத்து ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் கிழிந்துவிடும். இதன் மூலம் அந்த வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால் பல நாட்களாக ஸ்டிக்கர் கிழியாமல் இருந்ததால் அந்த வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து கைவரிசை காட்டி விடுகிறார்கள்.

சமீபகாலமாக கொள்ளைகும்பல் இதுபோன்ற நூதனமுறையை கையாண்டு வருகிறார்கள். ஆகவே பூட்டி இருக்கும் வீடுகளின் முன்பு சந்தேகப்படும்படியாக ஏதாவது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தாலோ, குறியீடு இருந்தாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story