தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு கையடக்க கணினி


தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு கையடக்க கணினி
x
தினத்தந்தி 18 April 2022 3:19 AM IST (Updated: 18 April 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வெள்ளை அங்கி வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:-

கால அவகாசம்

அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் தலா 150 இடங்கள் ஏற்படுத்தப்பட்டது. மொத்தம் 1,650 மாணவர்கள் சேர வேண்டும். ஆனால் 1,450 மாணவர்கள் சேர மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்தது.

அந்த இடங்களில் நீட் தேர்வு எழுதியவர்கள் சேர கடந்த 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

கையடக்க கணினி

மாநில அரசால் நிரப்பப்பட வேண்டிய இடங்கள், நிரப்பப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசின் இடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள 24 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் உள்ள சுமார் 300 இடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இதனால் விரைவில் அந்த இடங்கள் நிரப்பப்படும்.

கல்வியும், சுகாதாரமும் மாநில பட்டியலில்தான் இருக்கிறது. தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 534 மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கையடக்க கணினி வழங்கப்படும்.

டெல்லி, மராட்டியத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை தினசரி பாதிப்பு 50-க்கும் கீழ்தான் உள்ளது. இறப்பு ஏதும் இல்லை. தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது 88 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ஆனாலும் தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசனம் செய்து அசத்திய அமைச்சர்

ஊட்டிக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலையில் சுமார் 16 கி.மீ தூரம் நடைபயிற்சி சென்றார். தொடர்ந்து கட்டபெட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதற்கிடையில் முத்தநாடு கிராமத்தில் இயற்கை மற்றும் சித்த மருத்துவ முகாமில் கர்ப்பிணிகள் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி செய்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியனும், சர்வாங்காசனம் செய்து அசத்தினார்.

Next Story