நெல்லையில் நிலத்தகராறில் பயங்கரம் ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டிக்கொலை


நெல்லையில் நிலத்தகராறில் பயங்கரம் ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 18 April 2022 5:38 AM IST (Updated: 18 April 2022 5:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே நிலத்தகராறில் ஒரே குடும்பத்தில் பெண் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை,

நெல்லை மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 73). கட்டிட காண்டிராக்டர். இவருடைய தம்பி மரியராஜ் (56). இவர் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வந்தார். இவர்களுடைய சகோதரி வசந்தா (40). இவர் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கும், அதே ஊரைச் சேர்ந்த இவர்களுடைய சித்தப்பா மகனான அழகர்சாமி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது. மேலும் அந்த நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக மானூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்யப்பட்டு உள்ளது.

இருதரப்பினர் மோதல்

இந்த நிலையில் நேற்று ஜேசுராஜ் ஒரு நிலத்தில் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டார். அவருடன் தம்பி மரியராஜ், சகோதரி வசந்தா, அவரது கணவர் மற்றொரு ஜேசுராஜ் (43), மரியராஜ் மகன் ஆமோஸ் (23) உள்ளிட்டோர் அந்த இடத்தில் இருந்தனர்.

அப்போது அங்கு அழகர்சாமி, அவரது மனைவி பேச்சியம்மாள், மகன்கள் ராஜ மணிகண்டன், சுந்தரபாண்டி, மருமகன் செந்தூர்குமார் (25), மற்றும் உறவினர்கள் வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென்றுதகராறு ஏற்பட்டது. அந்த தகராறு இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதலாக மாறியது. இதில் அழகர்சாமி தரப்பினர் காண்டிராக்டர் ஜேசுராஜ், மரியராஜ் உள்ளிட்டோரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வசந்தாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். ேமலும் இருதரப்பைச் சேர்ந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

3 பேர் கொலை

இதை அறிந்த அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே காண்டிராக்டர் ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ஆமோஸ், வசந்தாவின் கணவர் ஜேசுராஜ், லேசான காயம் அடைந்த அழகர்சாமி, பேச்சியம்மாள், சுந்தரபாண்டி ஆகியோர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டி.ஐ.ஜி. நேரில் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

நாஞ்சான்குளம் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் அங்கு 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

4 பேர் கைது

இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அழகர்சாமி, அவருடைய மனைவி பேச்சியம்மாள், செந்தூர்குமார், உறவினர் ராஜலட்சுமி ஆகிய 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய சுந்தரபாண்டி, ராஜ மணிகண்டன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

குற்றவாளிகளை பிடிக்க டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

போலீஸ் குவிப்பு

இதற்கிடையே கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். கொலையானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

டி.ஐ.ஜி. பேட்டி

இதற்கிடையே நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாஞ்சான்குளம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நிலத்தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அதில் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட 2 பேரை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வருகின்றனர். அவர்களையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story