பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை - பாலியல் தொழில் நடத்தும் பெண்கள் மூலம் நகை அடகு வைத்தது அம்பலம்
மாங்காட்டில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. இந்த சம்பவத்தையடுத்து போரூர் உதவி கமிஷனர் பழனி, மாங்காடு இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், லதா மகேஷ்வரி, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் மாங்காடு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தை சேர்ந்த ராஜன் (வயது 46), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நவீன்குமார் (24), என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் இவர்களிடமிருந்து 85 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் என தெரியவந்தது.
மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு அந்த வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இவர்கள் பெயரில் நகைகளை அடகு வைத்தாலோ, விற்பனை செய்தாலோ போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்பதால் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் பழகி அவர்களிடம் நகைகளை கொடுத்து அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.
மேலும் இவர்கள் மீது ஆந்திரா, மதுரவாயல், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவம் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கொள்ளை சம்பவத்தின் போது முகத்தை மூடியபடியும், கையுறைகள் அணிந்தபடி வந்ததால் கைரேகைகள் பதிவாகவில்லை. மேலும் பிடிபட்டவர்கள் உருவங்களை முகமூடி போட்டு கொள்ளை அடிக்க வந்த நபர்களுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் அடையாளம் கண்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story