கழிவுநீரை அகற்ற கோரி வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் கழிவுநீரை அகற்றக்கோரி வியாபாரிகள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் கழிவுநீரை அகற்றக்கோரி வியாபாரிகள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புறவழிச்சாலை அமைக்கும் பணி
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை- நாகப்பட்டினம், சேலம், திருச்சி புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக சாலைகளில் இருபுறமும் இருந்த கடைகள் அகற்றப்பட்டு சாலை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு மற்றும் பாண்டி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் முன்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு சாலை அமைக்கப்படுவதால் கடைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் வீதியில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
சாலைமறியல்
மேலும் மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் உள்ள கிராமப்புற ரோடு இணைக்கப்பட்டுள்ளதால், வடிகால் இல்லாமல் அந்த பகுதி முழுவதும் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைக்கு பொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் வாய்க்காலை சரி செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை.
இந்தநிலையில் காலை 9 மணி அளவில் மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் வணிகர்கள் நலசங்க தலைவர் ஜெயக்குமார், துணைத்தலைவர் அருள்வாணன், செயலாளர் துரைமணி பொருளாளர் ராமநாதன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போக்குவரத்து வடக்கு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை தொடர்ந்து கடை வியாபாரிகள், பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story