1,089 கால்நடை உதவி டாக்டர்கள் பணிக்கான நியமன ஆணை முதல்-அமைச்சர் வழங்கினார்


1,089 கால்நடை உதவி டாக்டர்கள் பணிக்கான நியமன ஆணை முதல்-அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 18 April 2022 11:12 PM GMT (Updated: 18 April 2022 11:12 PM GMT)

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 1,089 கால்நடை உதவி டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,089 கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கடந்த 10 ஆண்டு காலமாக கால்நடை உதவி டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 1,089 கால்நடை உதவி டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கால்நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சைகள் மேலும் சிறப்பாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கால்டை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி. சு.ஜவஹர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையர் அ.ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறந்த திருநங்கை

இதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில், 2022-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.மர்லிமாவுக்கு வழங்கினார்.

அவரது 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி, விருதுக்கான ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிழையும் வழங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் ரத்னா, மாநில திட்டக் குழு உறுப்பினர் டாக்டர் நர்தகி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போரூர் மையம் விரிவாக்கம்

மேலும் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை போரூரில் அமைந்துள்ள அமெரிக்க நாட்டின் நீல்சன் ஐக்யூ நிறுவனத்தின் விரிவாக்க மையத்தை காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை போரூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் விரிவாக்க மையத்தின் மூலம் 2 ஆயிரத்து 500 நபர்களுக்கு, தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பூஜா குல்கர்ணி, நீல்சன் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மோகித் கபூர், உலகளாவிய செயல்பாடுகளின் தலைவர் மார்ட்டின் ரூசீலர்ஸ், மேலாண்மை இயக்குனர் சதீஷ் பிள்ளை, சென்னை செயல்பாட்டு மையத் தலைவர் கே.ஜி.பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story