கூத்தாண்டவர் கோயில் திருவிழா: பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்..!


கூத்தாண்டவர் கோயில் திருவிழா: பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்..!
x
தினத்தந்தி 19 April 2022 2:26 PM GMT (Updated: 2022-04-19T19:56:28+05:30)

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் கூவாகம் கிராமத்தில் குவிந்துள்ளனர். 

இந்நிலையில், கூத்தாண்டவர் கோயிலில் சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதனைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் கோவில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொண்டனர்.

தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் அரவாணை கணவனாக ஏற்று இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்வார்கள்.

நாளை 20-ந் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கி பந்தலடி சென்று அங்கு அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்து வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து விதவை கோலம் பூண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.

21-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா பெருவிழா விமரிசையாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

Next Story