சென்னை அருகே புதிய விமான நிலையம் - சட்டசபையில் தகவல்


சென்னை அருகே புதிய விமான நிலையம் - சட்டசபையில் தகவல்
x
தினத்தந்தி 20 April 2022 5:57 AM IST (Updated: 20 April 2022 5:57 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் குழு பரிந்துரைப்படி சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைகிறது. 4 இடங்களில் ஆய்வு செய்து அதிகாரிகள் அறிக்கை வழங்கி இருப்பதாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இட நெருக்கடி

இதனால் இரவுபகல் என்று இல்லாமல் எப்போதுமே இந்த விமான நிலையம் பரபரப்பாக காணப்படும். சமீப காலமாக விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே இட நெருக்கடி மற்றும் பயணிகளுக்கு கூடுதல் சேவைகளை அளிக்கும் வகையில் சென்னை அருகே மேலும் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இந்த சூழ்நிலையில் கொரோனா பரவல் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பன்னாட்டு விமான சேவை மீண்டும் விறுவிறுப்படைந்து உள்ளது.

4 இடங்களில் ஆய்வு

இந்த சூழ்நிலையில் புதிய விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை அருகே 4 இடங்களில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு உள்ளது. ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் ஒரு அறிக்கை தாக்கல் செய்து இருப்பதாக நேற்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் வெளியிடப்பட்ட தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதிய பன்னாட்டு விமான நிலையம்

அதிகரித்து வரும் விமான பயணிகள் போக்குவரத்தை கையாளுவதற்காக, புதிய விமான நிலையம் அமைக்கும்பொருட்டு, ‘டிட்கோ’ நிறுவனம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து தற்போதைய வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம், சென்னை விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும், விமான போக்குவரத்தில் எதிர்கால தேவையென மதிப்பிட்டுள்ளதை எதிர்கொள்வதற்கும், நீண்டகால அடிப்படையில் விமான போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், சென்னை அருகே ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையத்தை நிறுவ மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.

அறிக்கை சமர்ப்பிப்பு

இப்புதிய பன்னாட்டு விமான நிலையத்தை உருவாக்குவதற்கு சாத்தியமுள்ள இடங்களை அடையாளம் காணுவதற்கான பணியை அரசு, ‘டிட்கோ’விடம் ஒப்படைத்திருக்கிறது. இதன்படி, சாத்தியமுள்ள 4 இடங்களை ‘டிட்கோ’ தேர்வு செய்து, இவ்விடங்களில் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்தை கேட்டுக்கொண்டது.

இந்த 4 இடங்களையும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகளின் குழு பார்வையிட்டு, அதன் சாத்தியக்கூறு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பொருத்தமான இடம் இறுதி செய்யப்பட்டு, புதிய விமான நிலையத்தை நிறுவுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஓசூரில் புதிய விமான நிலையம்

நெய்வேலி விமான நிலையத்தில் விமானங்களை இயக்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளன. விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் உரிமம் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் விரைவில் இயக்கப்படும்.

தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் தொழில் துறையில் வளர்ச்சி, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி,சுற்றுலா, தனி மனித வருவாய் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஓசூர் பகுதியில் ஒரு புதிய விமான நிலையத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வருகிறது.

‘டிட்கோ’ ஆய்வு

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதி தொழிற்சாலைகளுக்கான மையமாக இருப்பதால், ஓசூரில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு இப்பகுதியை சுற்றியுள்ள விமான போக்குவரத்து மற்றும் அதன் வளர்ச்சி விகிதம், சந்தை தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சாத்தியக்கூறு உள்ள இடங்களை ஆய்வு செய்யுமாறு ‘டிட்கோ’வை அரசு பணித்துள்ளது.

அரசின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் ‘டிட்கோ’ ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story