பொதுக்கூட்ட மேடையில் பெண் போலீசுக்கு திருமணம் - கி. வீரமணி நடத்தி வைத்தார்
ஈரோட்டில் பொதுக்கூட்ட மேடையில் பெண் போலீசுக்கு திருமணத்தை கி.வீரமணி நடத்தி வைத்தார்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நீட் தேர்வு எதிர்ப்பு புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்டு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று பேசினார். முன்னதாக பொதுக்கூட்ட மேடையில் சுயமரியாதை திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கூட்டம் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கியது. மேடையில் மணமக்கள் ரா.நேரு- செ.பொ.அறிவுச்செல்வி ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உறுதிமொழி வாசித்து திருமண ஒப்பந்தம் செய்து வைத்தார். உறுதிமொழியை திரும்ப கூறி மணமக்கள் பூ மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து கொண்ட மணப்பெண் செ.பொ.அறிவுச்செல்வி காவல்துறையில் போலீசாக வேலை பார்க்கிறார். இவரது பெற்றோர் பொன்முகிலன்- செல்வி ஆகியோர் திராவிடர் கழக தீவிர பற்றாளர்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் திருமணத்தை ஆசிரியர் வீரமணி நடத்தி வைத்து உள்ளார். அவர்களின் மகளான அறிவுச்செல்விக்கு பெயர் சூட்டியதும் அவர்தான். இப்போது அவரே திருமணமும் செய்து வைத்து உள்ளார்.
திருமணத்தை நடத்தி வைத்த ஆசிரியர் கி.வீரமணி பேசும்போது, தந்தை பெரியார் திருமணத்தை மிக எளிமையாக நடத்த வேண்டும் என்று கூறுவார். அதன்படி மிக மிக எளிமையாக இந்த திருமணம் நடந்து உள்ளது. மணமக்களின் பெற்றோர் பந்தல் அமைக்கவில்லை. யாரையும் அழைக்கவில்லை. ஆனால் தந்தை பெரியாரை பின்பற்றி நடந்ததால், தலைவர்கள் மத்தியில், நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக இந்த திருமணம் நடந்து உள்ளது.
திருமணம் செய்துபார், வீட்டை கட்டிப்பார் என்பார்கள். பெரியாரை பின்பற்றினால் திருமணத்தையும் எளிமையாக செய்யலாம். வீட்டையும் எளிமையாக கட்டலாம். இந்த திருமணங்கள் தந்தை பெரியாரின் கொள்கை வாழ்கிறது. அவர் வெற்றி பெறுகிறார் என்பதை காட்டுகிறது என்றார்.
பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
Related Tags :
Next Story