கூவாகம் தேர்த்திருவிழா: வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து - 10 பேர் காயம்..!
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் திருநங்கைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் 16-வது நாள் நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) அதிகாலை கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூவாகம் தேர்த்திருவிழாவின் போது தேரோட்டத்தை காண அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பால்கனியில் ஏராளமான மக்கள் ஏறி இருந்தனர். தேர் வீட்டின் அருகே வந்தபோது திடீரென பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகம் பேர் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story