கவர்னர் விவகாரம்: சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!


கவர்னர் விவகாரம்: சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!
x
தினத்தந்தி 20 April 2022 12:41 PM IST (Updated: 20 April 2022 1:03 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு நடப்பு செய்தனர்.

சென்னை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க நேற்று மயிலாடுதுறைக்கு சென்றார்.

அப்போது மன்னம்பந்தல் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை கடந்து கவர்னர் சென்று விட்ட நிலையில், பாதுகாப்பாகச் சென்ற வாகனங்கள் மீது கொடிகள் மற்றும் கம்புகளை வீசி எறிந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கவர்னர் கார் மீது கருப்புக் கொடி, கல்வீசப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் கவர்னரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதனை தொடர்ந்து கருப்பு கொடி போராட்டத்தை கண்டித்து சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறையே பாதுகாப்பு கொடுத்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காவல்துறையின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது.

கவர்னரின் பாதுகாப்பில் காவல்துறை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கவில்லை?; இது தமிழ்நாட்டு காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி. கவர்னருக்கே பாதுகாப்பு இல்லாத போது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும், என்று கூறினார்.

Next Story