கவர்னருக்கு எதிராக நடந்த போராட்டம்: சட்டசபையில் முதல்-அமைச்சர் விளக்கம்
கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தருமபுரம் ஆதீனத்தை வந்தடைந்தார். மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி எதிரில் தமிழக கவர்னரின் கார் சென்றபோது விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சிகள், திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கவர்னரின் பார்வைக்கு போராட்டக்காரர்கள் படாத வகையில் போலீசார் வாகனத்தை கொண்டு வந்து மறைத்தனர். அப்போது போராட்டக்காரர்கள் கருப்பு கொடியை சாலையில் தூக்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழக கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டிய 77 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரவு அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று அதிமுக கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வந்து பின்னர் வெளிநடப்பு செய்தது.
இதனை தொடர்ந்து கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்ட விவகாரம், கவர்னரின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கவர்னர் தருமபுரம் ஆதினத்தை சந்திக்க திருக்கடையூர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி நேற்று தெளிவாக அறிக்கையை கொடுத்துள்ளார். அதை நீங்கள் பத்திரிக்கை, தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்.
ஆனாலும், கூடுதல் டிஜிபி-யின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஒன்றை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த ஆர்ப்பாட்டத்தில் கவர்னரின் கான்வாய் மீது கற்கல், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்.
வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கருப்பு வீசி எறிந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை என்பதை மிகத்தெளிவாக காவல்த்துறை கூடுதல் இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளார்.
கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபி-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கடைசியாக குறிப்பிட்டிருப்பது என்னனென்றால் அதிர்ஷ்டவசமாக கவர்னர், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களோ, கொடிகளோ மற்ற எந்த பொருட்களாலோ பாதிக்கப்படாமல் போலீசாரால் பாதுகாக்கப்பட்டது’ என குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
கவர்னரின் பயணம் பாதுகாப்பாக இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கவர்னரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டன என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதே உண்மை.
கவர்னருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்பதை நான் உறுதியோடு இந்த அவையில் பதிவு செய்கிறேன். கவர்னர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக இந்த அரசு அழைத்து சென்றிருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரசியல் சட்ட பதவியில் இருப்பவர்களை காப்பாற்ற அவர்களுக்குரிய பாதுகாப்பை அளித்திட இந்த அரசுக்கு பொறுப்பு இருக்கிறது.
அந்த கடமையை காவல்துறை செவ்வனே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. இந்த விளக்கமே போதும் என கருதுகிறேன்’ என்றார்.
Related Tags :
Next Story