சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - முதல் அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு..!
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பர்மாகாலனியில் தங்க பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. இந்த விபத்தில் அரவிந்தன் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் கட்டிட இடிபாடிற்குள் சிக்கி கருகிய நிலையில் கிடந்த வாலிபர் அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர். பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட உராய்வு காரணமான வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்த அரவிந்தன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் முதல் அமைச்சர் வெடிவிபத்தில் அரவிந்தன் உயிரிழந்த துயரச் செய்தியைக் கேட்டு வேதனை அடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story