அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம்
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் முடிவு செய்துள்ளன.
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திமொழி
கடந்த 10 நாட்களுக்கு முன்பு அலுவல் மொழி கூட்டத்தில், அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழி கட்டாயமாக இருக்கவேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழி பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கான பணிகளை உள்துறை அமைச்சகம் செய்யும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 12 மொழிகள் உள்ளன. இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா இந்தி திணிப்பு வேலையை செய்கிறார்.
புதுவை மாநிலத்தில் கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது. தேர்தல் காலத்தில் புதுவையின் நிதி நெருக்கடியை தீர்ப்போம், கடனை ரத்து செய்வோம் என்றனர். ஆனால் அதற்கான எண்ணம் அவர்களிடம் இல்லை. புதுவை மாநில மக்களின் கோரிக்கையே மாநில அந்தஸ்துதான். ஆனால் மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் எண்ணமில்லை என்கிறார்.
கருப்புக்கொடி போராட்டம்
தமிழ் மொழியை பழித்து இந்தியை வளர்க்கிறார்கள். இது பாரதிதாசன் பிறந்த மண். இந்த தமிழ் மண்ணுக்கு அமித்ஷா வரும்போது நாங்கள் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம். வருகிற 24-ந்தேதி பாக்குமுடையான்பட்டு சந்திப்பில் ஜனநாயக முறைப்படி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதை விளக்கி மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்த உள்ளோம்.
எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது. தி.மு.க. தங்கள் கட்சி மேலிடத்தை கேட்டு முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளது.
இவ்வாறு சலீம் கூறினார்.
பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சோ.பாலசுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், நிர்வாகிகள் அபிசேகம், கீதநாதன், சேதுசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story