உணவு பொருட்கள் மீதான புகார்களை தெரிவிக்க ‘வாட்ஸ்-அப்’ எண்


உணவு பொருட்கள் மீதான புகார்களை தெரிவிக்க ‘வாட்ஸ்-அப்’ எண்
x
தினத்தந்தி 22 April 2022 3:34 AM IST (Updated: 22 April 2022 3:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உணவு பொருட்கள் மீதான புகார்களை தெரிவிக்க ‘வாட்ஸ்-அப்’ எண் அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும், நடவடிக்கை விவரங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.

சென்னை,

காய்கறி மற்றும் பழங்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ, அனுமதிக்கப்படாத ரசாயன மருந்துகளை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது.

டீத்தூளில் செயற்கை நிறமிகளை சேர்க்கக்கூடாது. ஓட்டல்களில் உணவு பொருட்களில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

பொட்டாசியம் புரோமெட் சேர்க்காத பேக்கரி பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். சூடான டீ, காபி, சாம்பார், ரசம் மற்றும் அசைவ குழம்புகளை பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்யக் கூடாது.

உணவுக்கான தரத்துடன் உள்ள பேக்கிங் பொருட்களையோ மற்றும் அலுமினியம் பாயில் பேக்கிங் கவர்களை கொண்டு பார்சல் செய்ய வேண்டும். இட்லியை வேக வைப்பதற்கு பாலித்தீன் தாள்களை பயன்படுத்தக்கூடாது. சமையலுக்கு அயோடின் கலந்த உப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

செயற்கை வண்ணங்கள் கூடாது

பாக்கெட் உணவு பொருட்களில் இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட உரிம பதிவெண்கள் உள்ளதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ. மார்க் முத்திரை மற்றும் உரிம பதிவெண்கள் இல்லாத குடிநீர் கேன்கள், நெய் போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.

சாலையோர தள்ளுவண்டி கடைகள் வைத்திருப்போர் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உணவு பண்டங்களில் ஈ மற்றும் தூசுக்கள் படியா வகையில் மூடி விற்பனை செய்யவேண்டும். செயற்கை வண்ணங்களை உணவு பொருட்களில் சேர்க்கக்கூடாது.

பாக்கெட் உணவு பொருட்களில் தயாரிக்கப்பட்ட தேதி, உட்கொள்ளும் காலம் அல்லது காலாவதி தேதி, பேட்ச் எண், உணவு பொருளில் சேர்க்கப்பட்ட இடு பொருட்கள் விபரம், உணவு பொருளில் உள்ள நுண்ணூட்ட சத்துக்கள் விபரம் ஆகியவை கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ கூடாது.

‘வாட்ஸ்-அப்’ எண்

இந்தநிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் சென்னை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது மேற்படி உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மீறப்படும் நிகழ்வுகள் கண்டறியப்பட்டு உள்ளது. ஆய்வின்போது தவறு செய்துள்ள உணவு வணிகங்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் உணவு பொருட்களின் மீதான புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக 9444042322 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு குரல் பதிவு மூலமோ, படங்கள் மற்றும் வீடியோ மூலமோ தெரிவிக்கலாம். புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனுடைய விவரங்கள் உடனுக்குடன் புகார்தாரருக்கு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story