சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்


சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்
x
தினத்தந்தி 22 April 2022 3:40 AM IST (Updated: 22 April 2022 3:40 AM IST)
t-max-icont-min-icon

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றியது தொடர்பாக நேற்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். மதுராந்தகம் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.) மரகதம் குமரவேல் பேசியபோது நடந்த விவாதம் வருமாறு:-

மரகதம் குமரவேல்:- தாலிக்கு தங்கம் திட்டத்தில் தவறு நடப்பதால் அதை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தவறு இருந்தால் அதை திருத்தலாமே தவிர திட்டத்தை முழுவதும் ரத்து செய்யக் கூடாது.

அமைச்சர் கீதா ஜீவன்:- அரசின் மீது அவர் குற்றச்சாட்டை வைக்கிறார். இந்தத் திட்டத்தில் நிலுவையில் உள்ள 3 லட்சத்து 59 ஆயிரத்து 455 விண்ணப்பங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. அந்த விண்ணப்பங்களை சரிபார்த்த போது அதில் 24 சதவீதம் விண்ணப்பங்களே தகுதியுடையதாக கண்டறியப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் 2018-19-ம் ஆண்டு முதல் நீங்கள் வைத்துச் சென்ற நிலுவை விண்ணப்பங்கள் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 ஆகும். அதற்கே 2 ஆயிரத்து 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. 2018-19-ம் ஆண்டில் இருந்து இந்தத் திட்டத்தின் பயனை நீங்கள் கொடுக்கவே இல்லை. தங்கத்தையும், நிதியுதவியையும் கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் குழந்தைத் திருமணம் நடக்காது என்பது மட்டுமல்ல, எல்லாவற்றிலும் பெண்களின் நிலை உயரும். அப்படியே கிடப்பில் போட்டதினால் அது பெரிய சுமையாக மாறிவிட்டது.

டெண்டர் எடுக்கவில்லை

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:- நாங்கள் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டதாக அமைச்சர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கொடுத்து வந்தோம். ஆனால் இடையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு வந்தது.

டெண்டர் விட்டு அதை இறுதி செய்த பிறகுதான் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்ததால் டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுப் பெறுங்கள். அதே அதிகாரிகள்தான் இப்போதும் இருக்கின்றனர். அந்தத் திட்டத்தை குறை சொல்லக்கூடாது. அது அற்புதமான திட்டம். அதில் குறைபாடுகள் இருந்தால் அதை நீக்கி, சரி செய்யுங்கள்.

3 ஆண்டுகாலமாக அதிகமானோர் அதில் இடம்பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தின் பயனைப் பெறுவதற்காக ஆன்லைனில் பதிவு செய்கின்றனர். அதன்படிதான் கொடுக்க முடியும். பலருக்கு திருமணம் ஆகிவிட்டது, குழந்தையே பிறந்துவிட்டது என்று கூறுகிறீர்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் இருந்தது. அதனால் எந்தப் பணியும் நடைபெறவில்லை. எனவே இதில் எங்களை குற்றம் சொல்வதில் என்ன நியாயம் உள்ளது?

சபாநாயகர் மு.அப்பாவு:- அமைச்சர் உங்களை மீது குற்றம் சொல்லவில்லை.

குறைபாடு இருந்தால்...

எடப்பாடி பழனிசாமி:- டெண்டர் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்பதால்தான் காலதாமதமானது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- இந்தத் திட்டத்தை மோசம் என்று கூறவில்லை. அதிலுள்ள குறைபாடுகள் உள்ளன. அது முழுமையாக முறையாக சேர வேண்டுவோருக்கு சென்று சேரவில்லை. 3 ஆண்டுகாலமாக இருக்கக் கூடிய நிலுவை விண்ணப்பங்கள் பற்றி அமைச்சர் கூறியுள்ளார். அந்தத் திட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் மூலம் இப்போது மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கக்கூடிய பணிகள் நடைபெறுகிறது. அதில் பல பலன்கள் உள்ளன. முறையாக சேரக்கூடிய நிலையில் உள்ளது.

நீங்கள் கொண்டு வந்த திட்டத்தை மோசம் என்று கூறி நாங்கள் அதை மாற்றவில்லை. அதிலுள்ள குறைபாடுகளை புரிந்துகொண்டு, அறிந்து கொண்டு, நீங்கள் எந்த அதிகாரிகளை வைத்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றினீர்களோ, அதே அதிகாரிகளை வைத்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறோம்.

எடப்பாடி பழனிசாமி:- எந்தத் திட்டம் நன்றாக இருக்கிறதோ அதை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. புதிய திட்டத்தை இப்போது அறிவித்திருக்கிறீர்கள். அதை தொடர்ந்து செயல்படுத்தலாம். ஆனால் ஜெயலலிதா தொலைநோக்குச் சிந்தனையோடு கொண்டு வந்த திட்டம் அது. ஏழை, எளிய மக்கள் உரிய நேரத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், திருமணம் தடைபடுகிறதே என்ற காரணத்திற்காக அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

அந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் உயர் கல்வி படிக்கக் கூடிய நிலை ஏற்பட்டது. அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. திட்டத்திலோ, நிர்வாகத்திலோ குறைபாடு இருந்தால் அதை நீக்கிவிட்டு திட்டத்தைத் தொடர வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.

இருந்ததால் மாற்றினோம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- குறைபாடு இருந்த காரணத்தினால்தான் அதை மாற்றி இருக்கிறோம். வேறு ஒன்றும் இல்லை. திருமணம் முடிந்து, குழந்தையைப் பெற்று 5 ஆண்டுகள் ஆன பிறகு அந்த நிதி போய் அவர்களிடம் சேர்வதில்லை. அதனால்தான் மாற்றியிருக்கிறோம். தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையெல்லாம் நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எதையெல்லாம் மாற்றினீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டிய அந்த மாளிகையை குறை சொல்லி மாற்றினீர்கள். அதை பெரிதாக நாங்கள் நினைக்கவில்லை. இருந்தாலும், ஜனநாயக முறைப்படி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோமே தவிர, அது மோசம், இது மோசம் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நீங்கள் சொல்வதையும் நாங்கள் திருப்பி சொல்ல வேண்டியதிருக்கும்.

சபாநாயகர் மு.அப்பாவு:- படிப்புக்காகத்தான் அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போதும் படிப்பாகத்தான் செலவழிக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி:- நீங்களும், நாங்களும் கிராமத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஏழைகளில் கஷ்டம் நமக்கு தெரியும். அதை அறிந்து, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் திருமண வயதை எட்டும்போது திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தக் குடும்ப சூழ்நிலையையும், அவர்களின் பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டும். அடித்தட்டு மக்களுக்கு நன்மை செய்யும் அரசுதான் உண்மையான அரசாக இருக்க முடியும். அந்த நிலை இந்த அரசுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

பெண் கல்விக்கான திட்டம்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:- தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நானே பாராட்டி பேசியிருக்கிறேன். அதில் 2 நன்மைகள் உள்ளன. முதலில், கல்வியை அது ஊக்குவிக்கிறது. அடுத்ததாக, பெரிய செலவை ஏற்படுத்தும் திருமணத்திற்கு வங்கிகளில் கடன் வழங்கும் நிலை இல்லை. எனவே திருமணத்திற்காக தவறான நபர்களிடன் கடன் வாங்கி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, திருமண செலவை குறைக்கும் வகையில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

திருமணத்தை நடத்தும் முன்பதாக அல்லது நடக்கும்போது இந்தத் தொகை கொடுக்கப்பட்டால் கடன் பாதிப்பை நீக்க வாய்ப்புள்ளது. ஆனால் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குப் பிறகு கொடுத்தால், அதில் உறுதி செய்யப்பட்ட பாதுகாப்பு நோக்கத்தின் மதிப்பு இல்லாமல் போய்விடுகிறது. பெண் படித்திருந்தால் திருமணத்திற்கு கூடுதல் பணம் கிடைக்கும் வகையில் அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் நாங்கள் கொண்டு வந்திருக்கும் திட்டம் என்னவென்றால், பெண்கள் கல்வி பெறுவதற்கே பணம் கொடுக்கிறோம் என்பதுதான். இதுதானே சிறப்பு.

இப்போதுள்ள காலத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம், சொத்துரிமை, வேலை வாய்ப்பு, தொழில் தொடங்கும் உரிமைகள் ஆகியவற்றைப் பெற வேண்டும். அதற்கு கல்வி அவசியம் தேவை. அதற்காகத்தான் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றியிருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி:- இப்போது படிக்கும் பெண்களுக்கு இந்த திட்டம் சரிதான். ஆனால் ஏற்கனவே படித்திருக்கும் ஏழைப் பெண்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? இந்தத் திட்டத்தின் மூலம் அதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். எனவே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தைத் தொடர மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story