மின்வெட்டு விவகாரம்: அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில் திருப்தி அளிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
மின்வெட்டு தொடர்பாக சட்டசபையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார்.
அதனை தொடர்ந்து மின்வெட்டு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
மின்வெட்டு தொடர்பான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. தமிழ்நாடு அரசு முறையாக நிலக்கரி கொள்முதல் செய்யாததே மின்வெட்டுக்கு காரணம்.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய தொகுப்பிலிருந்து தேவையான நிலக்கரியை பெறாத காரணத்தினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டுள்ளது.
கோடைகாலத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் தற்போது மின் தடை நிலவுகிறது. சத்தீஸ்கரிலிருந்து தமிழ்நாடு வரை மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு முறையாக மின்சாரத்தை பெறவில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கோடைகாலத்தில் 17,120 மெகாவாட் மின்சாரம் தடையில்லாமல் கொடுத்தோம். கடந்த திமுக ஆட்சிக்காலத்திலும் மின்வெட்டு, தற்போதும் மின்வெட்டு தான்.
அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது. அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்தியதால் புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story