சாயல்குடி இரட்டை கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை..!


சாயல்குடி இரட்டை கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை..!
x
தினத்தந்தி 22 April 2022 2:01 PM IST (Updated: 22 April 2022 2:01 PM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே கிறிஸ்தவ ஆலயம் கட்டுவது தொடர்பாக உள்ள முன்விரோதத்தில் அண்ணன் தம்பியை கொலை செய்த பெண் உள்பட 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கிறிஸ்தவ ஆலயம் கட்டுவது தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டு அண்ணன் தம்பி இருவரை கொலை செய்த பெண் உள்பட 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

முன்விரோதம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது கன்னிராஜபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பாண்டி என்பவரின் மகன் வேதமணி (வயது 65). இவரின் தம்பி ஆசிர்வாதம் (58). இவர்களுக்கும் கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த உறவினர்களுக்கும் அந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவது தொடர்பாகவும் பொறுப்பு வகிப்பது தொடர் பாகவும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இதுதொடர்பான பிரச்சனையில் ஆத்திரமடைந்த ஆலய பொறுப்பில் இருந்த உறவினர்களான கன்னிராஜபுரத்தை சேர்ந்த ரெத்தினம் மகன்கள் வேதமாணிக்கம் (69), பால் என்ற பால்மனோகரன் (65), குணா என்ற குணசேகரன் (52), வேதமாணிக்கம் மனைவி பூவம்மாள் (61), மகன் ஜோசப்ராஜா (45), பொன்னையா மகன் ராஜமுத்து (37) ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

கைது

இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மேற்கண்ட வேதமணி, ஆசிர்வாதம் இருவரும் கன்னிராஜபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பெருமாள் கோவில் வழியாக வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்த மேற்கண்டவர்கள் இரும்பு கடப்பாரை மற்றும் கம்பியால் தாக்கினார்களாம். தடுக்க வந்த அவர்களின் தங்கை கன்னி மரியாளையும் தாக்கினார்களாம். இதில் படுகாயம் அடைந்த வேதமணி, ஆசிர்வாதம் ஆகியோர் பலியாகினர். 

இந்த சம்பவம் தொடர்பாக கன்னிமரியாள் கொடுத்த புகாரின்பேரில் சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போதைய கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையிலான தனிப் படையினர் தீவிர விசாரணை நடத்தி மேற்கண்ட 6 பேரையும் கைது செய்தனர்.

தீர்ப்பு

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்ற வந்த நிலையில் குணா என்ற குணசேகரன் இறந்துவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா, இரட்டை கொலை வழக்கில் வேதமாணிக்கம், பால் என்ற பால்மனோகரன், ஜோசப்ராஜா, பூவம்மாள், ராஜமுத்து ஆகிய 5 பேருக்கு ஆயுள்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். 

இந்த வழக்கில் கன்னிமரியாளை தாக்கிய பூவம்மாளுக்கு ரூ.5 ஆயிரம் கூடுதலாக அபராதம் விதித்தார். இந்த இரட்டை கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு உள்ள பூவம்மாள் இறந்த வேதமணியின் மனைவி ஆவார். இவர், வேத மாணிக்கம் சகோதரர்களுக்கு ஆதரவாக கணவர் என்றும் பாராமல் வேதமணியை தாக்கி கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story