இருசக்கர வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்


இருசக்கர வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 22 April 2022 6:44 PM GMT (Updated: 2022-04-23T00:14:42+05:30)

இருசக்கர வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்

புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவைக்கு வெளியூர்களில் இருந்து சுற்றுலா வருபவர்கள், இருசக்கர வாடகை வாகனங்களுக்கு அதிக கட்டணம் செலுத்துகின்றனர். இருசக்கர வாகனம் முறைகேடாக வாடகைக்கு விடுவதை பல ஆண்டுகளாக அரசு முயன்றும் தடுக்க முடியவில்லை. இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுப்பவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் போக்குவரத்து விதிமீறல்களும் செய்கின்றனர். ஒரே மாதிரியான வண்ணம்கொண்ட நம்பர் பிளேட் பயன்படுத்துவதால் வாகனத்தில் வருபவர் உள்ளூர் பயணியா? அல்லது வெளியூர் பயணியா? என்பதை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு சிரமமாக உள்ளது. 
இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் அரசின் போக்குவரத்துத்துறை மூலம் அனுமதிபெற வேண்டும். அவர்கள் வாடகைக்கு விடும் இருசக்கர வாகனங்களில் மஞ்சள்நிற பின்புலத்தில் கருப்புநிற எழுத்துகளால் எழுதப்பட்ட நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். சுற்றுலா பயணிக்கும் பாதுகாப்பான வாகனம் கிடைப்பது உறுதி செய்யப்படும். எனவே மஞ்சள் நிற நம்பர் பிளேட் வாடகைக்கு விடப்படும் இருசக்கர வாகனங்களுக்கு பொருத்த தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் சம்பத் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.Next Story