இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக வந்தனர்


இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக வந்தனர்
x
தினத்தந்தி 23 April 2022 1:45 AM IST (Updated: 23 April 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து 18 அகதிகள் ராமேசுவரம் வந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ராமேசுவரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து விட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் 13 பேர் புறப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்து இறங்கினார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ராமேசுவரம் கடலோர காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று தனுஷ்கோடி கடற்கரையில் நின்று கொண்டிருந்த 13 அகதிகளையும் வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதேபோல் நேற்று காலை இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் புறப்பட்டு ராமேசுவரம் சேரான்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கிய 5 அகதிகளையும் போலீசார் மண்டபம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். ஒரேநாளில் 5 குடும்பத்தைச் சேர்ந்த 8 ஆண்கள், 7 பெண்கள், 1 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தைகள் என 18 பேர் வந்துள்ளனர்.

போலீசார் விசாரணை

இந்த அகதிகளிடம் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த அகதிகள் அனைவருமே இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் உணவுப்பொருட்கள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாலும், உணவு பொருட்கள் கிடைக்காத நிலை இருந்து வருவதோடு பல நாட்கள் சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவதால் குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர் வாழ்வதற்காகவே படகு மூலம் தமிழகத்திற்கு தப்பி வந்ததாக கண்ணீருடன் விசாரணையில் தெரிவித்துள்ளனர். நேற்று வந்த 18 அகதிகளுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 60 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவுப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பின்னர் இந்த 18 அகதிகளும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story