கோடம்பாக்கத்தில் பரபரப்பு: விசாரணைக்கு சென்ற போலீசாரை கடித்து குதறிய போதை வாலிபர் கைது..!


கோடம்பாக்கத்தில் பரபரப்பு: விசாரணைக்கு சென்ற போலீசாரை கடித்து குதறிய போதை வாலிபர் கைது..!
x
தினத்தந்தி 23 April 2022 7:08 AM IST (Updated: 23 April 2022 7:08 AM IST)
t-max-icont-min-icon

பெற்ற தாயை வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்தது குறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை கடித்து குதறிய போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சென்னை கோடம்பாக்கம், கோவிந்தராஜன் தெருவைச் சேர்ந்தவர் அமலா (வயது 60). இவர் நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பரபரப்பாக பேசினார். தன்னையும், தனது பேரக்குழந்தையையும், தனது மகன் சதீஷ்குமார், வீட்டுக்குள் பூட்டி வைத்து, சிறை வைத்துள்ளதாகவும், உரிய உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்தவுடன், கோடம்பாக்கம் ரோந்து போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஏட்டு பெருமாள், காவலர் வீரசெல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பூட்டிக்கிடந்த வீட்டை திறந்து அமலாவையும், அவரது மகள் வழிப்பேரனையும் மீட்டனர்.

அப்போது போதையில் இருந்த அமலாவின் மகன் சதீஷ்குமார், ஏட்டு பெருமாளையும், காவலர் வீரசெல்வனையும் தாக்கினார். தாயார் அமலாவையும் அடித்து உதைத்தார். அவரை பிடிக்க முயன்ற ஏட்டு பெருமாளின் கையை பிடித்து கடித்து குதறி விட்டார். இதனால் பெருமாள் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பெருமாள் மற்றும் அமலா கொடுத்த புகார்கள் அடிப்படையில், போதை வாலிபர் சதீஷ்குமார் (வயது 35) மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் உதவி கமிஷனர் பாரதிராஜன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தாயாருடன் ஏற்பட்ட சொத்து தகராறில், சதீஷ்குமார் போதையை ஏற்றி, இந்த தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

Next Story