நெல்லையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
நெல்லையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் எஸ்.ஐ.க்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை,
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் நேற்று இரவு அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர்.
கோவில் கொடை விழா முடிந்த பிறகு அங்கு வைக்கட்டு இருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றும் போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. வாக்கு வாதத்தின் போது ஆறுமுகம் திடீரென காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் மீது ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கைப் பதிவு செய்தது எஸ்.ஐ மார்க்கரேட் திரேஷாதான் என்று சொல்லப்படுகிறது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ஆறுமுகம் கத்தியால் குத்தியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் எஸ்.ஐ. மார்க்கரேட் திரேஷா நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், நெல்லையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் எஸ்.ஐ. மார்க்கரேட் திரேஷா-வுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காயமடைந்த பெண் எஸ்.ஐ.க்கு உயர்தர சிகிச்சையளிக்க நெல்லை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க... நெல்லை: கோயில் விழாவில் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து
Related Tags :
Next Story