புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமாற்ற குற்றச்சாட்டு என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி
புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தென்னிந்திய வணிக மற்றும் தொழில் அவையின் சென்னை கிளை மாநாடு புதுவையில் நேற்று நடந்தது. மாநாட்டை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சரித்திர முக்கியத்துவம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் புதுச்சேரி வருகை என்பது ஒரு மைல்கல்லாக இருக்கும். அவர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்ட உள்ளார். இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருக்கும். புதுவை மாநிலமானது வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
உள்துறை மந்திரி அமித்ஷா வருகையை வளர்ச்சி திட்டங்களுக்கான வருகையாக மட்டுமே பார்க்கவேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் புதுச்சேரியின் வளர்ச்சியை விரும்பாதவர்களாக தான் இருக்க முடியும்.
மகான் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் அமித்ஷா கலந்துகொள்கிறார். புதுச்சேரி மண்ணில் பல ஆண்டு காலம் வாழ்ந்த ஆன்மிகவாதி, சுதந்திர போராட்ட வீரர் அரவிந்தர். அவருக்கு சிறப்பு செய்ய வருகிறார்.
சிறப்பு முகாம்கள்
புதுவையில் புதிதாக தொற்று பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. அறிகுறிகள் இருந்தால் தொற்றாக மாறிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
நாம் அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரி எந்த வகையிலும் 4-வது அலையால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போடவேண்டும். தேவைப்பட்டால் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.
மக்களை தற்போது மீண்டும் தடுப்பூசியின் பக்கம் திருப்புவது சற்று சிரமமாக உள்ளது. தடுப்பூசி போட்டதால் நாம் அனைவரும் கவலையில்லாமல் இருக்கிறோம். தடுப்பூசி போடும் திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம், புதுவையில் கவர்னர் மூலமாக பா.ஜ.க. ஆட்சியை கொண்டுவர திட்டமிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது குறித்து கேட்டதற்கு, நான் இந்த மாநிலத்தின் கவர்னராக ஆக்கப்பூர்வமான எந்த கோப்பு வந்தாலும் ஒப்புதல் அளிக்கிறேன். நான் எனது பணியை செய்துகொண்டிருக்கிறேன். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமானதாக பார்க்கவேண்டும் என்று சிரித்துக்கொண்டே கவர்னர் பதிலளித்தார்.
Related Tags :
Next Story