மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை புதுச்சேரி வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை புதுச்சேரி வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகிறார். அவர் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அமித்ஷா வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி வருகிறார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9.55 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வருகிறார்.
அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர் வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து கார் மூலம் காலை 10.20 மணிக்கு ஈஸ்வரன்கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்கு வருகிறார்.
அரவிந்தரின் 150-வது ஆண்டுவிழா
பாரதியார் நினைவு இல்லத்தை சுற்றிப்பார்க்கும் அவர் பாரதியார் படத்துக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து 10.40 மணிக்கு அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறார். அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம் செய்துவிட்டு 10.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலாப்பட்டு பல்கலைக்கழக கன்வென்சன் சென்டருக்கு 11 மணிக்கு செல்கிறார்.
அங்கு அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் அமித்ஷா கலந்துகொள்கிறார். மேலும் புதுவை பல்கலைக்கழகத்தில் ரூ.48 கோடி செலவில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சிகள் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 12.40 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பிடும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
ரங்கசாமி சந்திப்பு
மதியம் 1.30 மணி அளவில் அமித்ஷாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பு 1.55 மணி வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து 2 மணிக்கு அவர் கம்பன் கலையரங்கம் வருகிறார்.
அங்கு கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.70 கோடியில் புதிய பஸ்நிலையம், குமரகுருபள்ளத்தில் ரூ.45 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.30 கோடியில் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள போலீசாருக்கு பணி ஆணைகளையும் வழங்கி பேசுகிறார். நிகழ்ச்சிகள் பிற்பகல் 3.45 மணி அளவில் முடிகிறது.
பா.ஜ.க. அலுவலகம்
அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலத்துக்கு வருகிறார். புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறந்துவைக்கும் அவர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
இவை எல்லாம் முடிந்து மாலை 5.05 மணிக்கு கட்சி அலுவலகத்தில் இருந்து அமித்ஷா விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.
பாதுகாப்பு தீவிரம்
அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமித்ஷா செல்லும் வழியெங்கும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியின்போது போலீசார் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன், ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். போலீசாரின் பாதுகாப்பு பணிகளை அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அமித்ஷாவை வரவேற்று புதுவை நகர் முழுவதும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பதாகைகள், கொடி தோரணங்களையும் பா.ஜ.க.வினர் கட்டியுள்ளனர்.
Related Tags :
Next Story