சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை: தலைமை நீதிபதியிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை: தலைமை நீதிபதியிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 April 2022 5:36 AM IST (Updated: 24 April 2022 5:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை தொடங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

சென்னை ஐகோர்ட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 9 அடுக்குமாடி நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

என்.வி.ரமணா

சென்னை ஐகோர்ட்டும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும் இணைந்து நடத்திய இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, பி.என்.பிரகாஷ், எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்ட நீதிபதிகள், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், காஷ்மீர் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், மாவட்ட நீதிபதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்ட அனைவரையும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி வரவேற்று பேசினார். இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

வணிக நீதிமன்றம்

நிகழ்ச்சியின்போது புதிதாக கட்டப்படவுள்ள 9 அடுக்குமாடி நிர்வாக கட்டிடத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா அடிக்கல் நாட்டினார். பின்னர், நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடியிருப்புகளை திறந்துவைத்து பேசினார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதன்முதலாக சென்னை எழும்பூரில் உருவாக்கப்பட்ட வணிக நீதிமன்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், கொரோனா காலத்தில் உயிரிழந்த வக்கீல்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கி மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பு

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தமிழகத்துக்கு வந்திருப்பது, உள்ளபடியே பெருமைக்குரியது. அவரோடு, நானும் இந்த விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். சட்டத்தின் குரலாக மட்டுமல்ல, மக்களின் குரலாகவும் பலநேரங்களில் ஒலிக்கக்கூடியவராக அவர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் மக்கள் மன்றத்தின் விருப்பங்களை, உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய மன்றங்களாக செயல்பட வேண்டும். நமது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் அப்படித்தான் செயல்பட்டு வருகிறார். அதேபோல், சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியும் நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

விரைவில் நீதி கிடைப்பதற்கு...

தமிழ்நாட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று, அங்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கக்கூடியவர்களாக நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள்.

நாகரிக சமுதாயத்தின்முன்னேற்றத்துக்கும், மறுமலர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்புக்கும், அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்குவதற்கும், சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசும் செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் விரைவில் நீதி கிடைப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் இந்த அரசு செய்து வருகிறது.

கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க...

கடந்த ஆண்டு மட்டும் சார்நிலை நீதிமன்றங்களுக்கு 64 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3 வணிகவியல் நீதிமன்றங்கள் (கமர்ஷியல் கோர்ட்டு), உரிமையியல் நீதிபதி (சிவில் ஜட்ஜ்) நிலையில் அமைப்பதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல, 3 வணிகவியல் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதி நிலையில் அமைப்பதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் புதிதாக சார்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்துக்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் கீழமை நீதிமன்றங்களை படிப்படியாக சொந்த கட்டிடங்களுக்கு மாற்றுவதற்கும் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது. காரைக்குடியில் ஒரு சட்டக்கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வக்கீல்கள் சேமநல நிதி உயர்வு

நீதித்துறையின் உயிரோட்டமாக விளங்கும் வக்கீல்களின் நலன் காப்பதிலும் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலமாக வக்கீல்களின் கோரிக்கையான தமிழ்நாடு வக்கீல்கள் நல நிதி மூலம் வழங்கப்படும் சேமநல நிதியானது ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த சுமார் 450 வக்கீல்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.20 கோடியை மாநில அரசு விரைவில் வழங்கும். இன்னொரு நல்ல செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

அம்பேத்கரின் பிறந்தநாளான கடந்த 14.4.2022 அன்று, சென்னை ஐகோர்ட்டு வளாகத்துக்குள் இயங்கி வரும் பல்வேறு நீதிமன்றங்களை ஒரு புதிய 9 மாடி கட்டிடத்தில் அமைக்கக்கூடிய வகையில் ரூ.20 கோடியே 24 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னையின் முக்கிய பகுதியில் நீதித்துறையின் உட்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நீதிமன்றங்களை அமைக்கும் வண்ணம் கடந்த 20-ந்தேதி 4.24 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு இந்த அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அந்த கட்டிடம் அமைந்தால் நீதித்துறை உட்கட்டமைப்புக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவை பூர்த்தி ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்னையில்சுப்ரீம் கோர்ட்டு கிளை

இந்த தருணத்தில், நீதித்துறையே முழுமையாக இங்கு வந்து வீற்றிருக்கும் இந்த மேடையில் மாநிலத்தின் சார்பாக சில கோரிக்கைகளை வைக்க நான் விரும்புகின்றேன். சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஐகோர்ட்டில் தமிழ்மொழி வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் வக்கீல்களின் நலனை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டின் ஒரு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.

இந்த 3 கோரிக்கைகளையும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு முன்பாக நம் அனைவரின் சார்பில் நான் வைத்திருக்கின்றேன். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியும், தமிழகத்தில் இருந்து டெல்லி சென்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளாக செயலாற்றுவோரும் அதற்கு துணை நிற்க வேண்டும். நீதிபதிகள் அதனை நிச்சயம் நிறைவேற்றி தருவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story