“திமுக அரசு சொன்னதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
“வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்பதை நானே நேரில் வந்து பார்ப்பேன்” என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்,
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த உள்ளாட்சித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்துமாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப் பணிகள், குறித்து அவர் கேட்டறிந்தார். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுவாரசியமாக கலந்துரையாடினார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். மேலும் திமுக அரசு சொன்னதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
“குடிநீர் மற்றும் ரேஷன் கடை பிரச்சனைகளை கூறினீர்கள். மகளிர் சுய உதவிக்குழு, 100 நாள் வேலை கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். மக்கள் வைத்த கோரிக்கைகள் மிக விரைவில் நிறைவேற்றப்படும்.
எதிர்கட்சி என்று பாராமல் அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே குறிக்கோள். ஒவ்வொருவரின் வாழ்வும் வலம் பெற அரசு செயல்பட்டு வருகிறது.
ஏதோ கோரிக்கைகளை கேட்டுவிட்டு, அறிவிப்பை வெளியிட்டேன் என நினைக்க வேண்டாம். திமுக அரசு சொன்னதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும். அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்பதை நானே நேரில் வந்து பார்ப்பேன்.”
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story