சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் பலி


சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 24 April 2022 11:14 PM IST (Updated: 24 April 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றபோது பெரம்பலூர் அருகே சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

பாடாலூர், 
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் கமலகண்ணன் (வயது 42).  இவர் திண்டுக்கல்லில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதா (40). இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட கைப்பந்து பயிற்சியாளர் ஆவார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கமலகண்ணன் மராட்டியம் மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலம் கோவிலுக்கு செல்வதற்காக இன்று அதிகாலை தனது மனைவியுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.
தூக்க கலக்கத்தில்...
இவர்களுடன் சேர்ந்து கோவிலுக்கு செல்வதற்காக கமலகண்ணனின் சித்தி கோவை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மலர்தம்பி மனைவி மணிமேகலை (64), லதாவின் தாய் திருவாரூர் மாவட்டம் இடைமேலையூர் தெற்கு தெருவை சேர்ந்த சவுந்தர்ராஜன் மனைவி வேம்பு (65), அண்ணன் ராமச்சந்திரன் (44) ஆகியோர் திருச்சியில் காருக்காக காத்து கொண்டிருந்தனர். அவர்களை திருச்சி வந்து கமலகண்ணன் காரில் ஏற்றி கொண்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.45 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரம் அருகே வந்த போது தூக்க கலக்கத்தில் கமலகண்ணன் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிக்கெட்டு ஓடி சாலையின் மைய தடுப்பு சுவரில் (சென்டர் மீடியன்) பயங்கரமாக மோதி ‘பல்டி' அடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 பேர் பலி; 2 பேர் படுகாயம்
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த கமலகண்ணன், அவரது மனைவி லதா, லதாவின் தாய் வேம்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கமலகண்ணனின் சித்தி மணிமேகலை, லதாவின் அண்ணன் ராமச்சந்திரன் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். 
இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மணிமேகலை, ராமச்சந்திரன் ஆகியோரை காரில் இருந்து மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
அதனை தொடர்ந்து போலீசார் உயிரிழந்த கமலகண்ணன், லதா, வேம்பு ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்துக்குள்ளான காரை சாலையில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியதோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story