‘பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்-அமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார்’ - டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை


‘பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்-அமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார்’ - டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை
x
தினத்தந்தி 24 April 2022 11:15 PM GMT (Updated: 24 April 2022 11:15 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க தொடக்க விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் உரிமை நலச்சங்கம், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கத்தை தொடங்கி வைத்து, அதன் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ச.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் உரிமை நலச்சங்கத்தின் மாநில தலைவர் கே.பொன்மலை, பொதுச்செயலாளர் சரவண பெருமாள், பொருளாளர் அ.பெரியண்ணன், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றச் சங்க மாநில தலைவர் இரா.பரந்தாமன், பொதுச்செயலாளர் ச.தாமோதரன், பொருளாளர் ர.ஞானசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சங்கத்தை தொடங்கி வைத்ததோடு, சங்க நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

கலைஞர் சொன்ன வார்த்தை

இப்போது தொடங்கப்பட்டிருக்கும் இந்த அமைப்புகள் சிறந்தது, இதில் சேர்ந்தால் தான் உரிமை, பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பக்கூடிய வழிமுறைகள், போராட்டங்கள் இருக்க வேண்டும். இந்த அமைப்பு யாருடனும் கூட்டுவைத்து போராட தேவையில்லை. அவர்கள் நம்மோடு வந்து சேர்ந்து போராடட்டும். நாம் தொடங்கிய இந்த அமைப்பை நன்றாக கொண்டு செல்வோம். போராட்டக்களத்தில் நாங்கள் வந்து வாழ்த்து சொல்லி பேசவேண்டிய விஷயங்களை பேசுவோம்.

இரு தினங்களுக்கு முன்பு ஒரு பிரச்சினை தொடர்பாக நளினமாக கோடிட்டு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அன்று மாலையே அந்த துறை சார்ந்த அமைச்சர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். எதை சொன்னாலும், செய்தாலும், அது நளினமாக, நாகரிகமாக இருக்கவேண்டும் என்று கலைஞர் சொல்லுவார். நான் கொடுத்த அறிக்கைக்கு பதில் கடிதம் அனுப்பிய மாண்பு இந்த அரசிடம் இருக்கிறது. இந்த அரசு இப்படிப்பட்ட அமைச்சர்களை பெற்று இருக்கிறது.

முதல்-அமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார்

அந்த வகையில் நானும், அன்புமணி ராமதாசும் என்ன சொல்கிறோம் என்பதை கூர்ந்து கவனிக்கிறார்கள். அதில் நிவர்த்தி செய்யக்கூடியதை அதிகாரிகளிடம் சொல்லி பூர்த்திசெய்கிறார்கள். ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான, வளர்ச்சிக்கான யோசனைகளை நாம் சொல்கிறோம். அதற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் துறைரீதியாக முடிவு எடுக்கிறார்கள்.

ஒரு அமைப்பை தொடங்குவது பெரிதல்ல, பெருமை அல்ல. அதை வளர்ச்சி, முன்னேற்றம், குறிக்கோளை அடைவதில் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப கொண்டு வரவேண்டும் என்று நீங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள். அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயமாக நிறைவேற்றுவார்.

நான் ஒரு போராட்டக்காரன்

ஒரு அமைப்பு என்பது அதை வழிநடத்துவது, மாதம் மாதம் கூடி பேசுவது, பிரச்சினைகளை அலசுவது, கடைசியாக கோரிக்கைகளை கொண்டுவருவது, அதன்பின் எங்கள் பார்வைக்கு வந்து, பின்னர் போராட்டம் செய்வது. நாம் செய்கிற போராட்டம் மூலம் கிடைக்கும் வெற்றிகள் நம்முடன் சேர்ந்து போராடுபவர்களுக்கும் சென்றடையவேண்டும். அவர்களால் சாதிக்க முடியாததை நம்முடைய இந்த 2 அமைப்புகள் சாதிக்கும். அதனால்தான் இந்த 2 அமைப்புகளை தொடங்கியிருக்கிறோம். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். போராடும் நிலை வந்தால் முன்னாள் வந்து உட்கார்ந்து போராடுபவன், ராமதாஸ். ஏனென்றால் நான் ஒரு போராட்டக்காரன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story