இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடங்கள்; பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்...!
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பிட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும் என 2021-22 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
39 ஆயிரத்து 913 சதுர அடியில் 4 தளங்களில் நவீன வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. திருக்கோவில் புத்தக விற்பனை நிலையம், வரவேற்பரை, உதவி ஆணையர் அறை, உணவிடம், வாகன நிறுத்துமிடம் உள்பட நவீன வசதிகளுடன் துறையின் பல்வேறு அதிகாரிகள் தனித்தனியே அறை ஒதுக்கீடு செய்யப்படும் வகையில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இந்த கட்டிட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் திருக்கோவில்களில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்கள் 1,500 பேரை பணி வரைமுறை செய்யப்படுவர் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு முதற்கட்டமாக பல்வேறு திருக்கோவில்களில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றக்கூடிய 425 நபர்களுக்கு பணி வரைமுறை செய்யப்பட்டுள்ளது. அதில் 33 நபர்களுக்கு நேரடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி வரைமுறை ஆணையை வழங்கினார்.
Related Tags :
Next Story