திருச்சி: வீட்டில் பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டைகள் பறிமுதல் - 2 பேர் கைது...!


திருச்சி: வீட்டில் பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டைகள் பறிமுதல் -  2 பேர் கைது...!
x
தினத்தந்தி 25 April 2022 10:30 AM IST (Updated: 25 April 2022 10:10 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே சந்தன கட்டைகளை கடத்த முயன்ற 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம்  உப்பிலியபுரம் அருகே உள்ள டி. பாதர் பேட்டை கிராமத்தில் தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. 

இதனை மூடக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். 

இதனை அடுத்து  நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆசிரமத்தை மூடி சீல் வைத்தது. 

அப்பொழுது ஆசிரமத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிற மதுரையை சேர்ந்த மணிகண்டன்(43) என்பவர் டி. பாதர்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன்(55) என்பவரிடம்  ஒரு சாக்கு பையை ஒப்படைத்து. அதில் விபூதி தயாரிக்கப் பயன்படும் எந்திரத்தின் உதிரி பாகங்கள் மற்றும் விபூதி தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள் இருப்பதாக கூறி ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து துறையூர் வனச்சரக அலுவலகத்திற்கு வெங்கடேசன் என்பவர் வீட்டில்  சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

துறையூர் வனசரக அலுவலர் பொன்னுச்சாமி தலைமையிலான வனத்துறையினர் நேற்று இரவு வெங்கடேசன் வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர். சோதனையில் அவரது வீட்டில் இருந்து 22.4 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டது. 

சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக துறையூர் வனச்சரக அலுவலர் பொன்னுச்சாமி வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.


Next Story