தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்த் என்ற சித்தானந்தம் (வயது 30). இவர் மீது பெரியகடை போலீஸ் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆனந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே அவருக்கு நீதிமன்றம் பிடிவாராண்டு பிறப்பித்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் முதலியார்பேட்டையை சேர்ந்த விக்கி (25) என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் முதலியார்பேட்டையில் வாலிபர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் ஆனந்த், விக்கி ஆகிய 2 பேரும் கலந்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்தவுடன் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story