மாங்குரோவ் காடுகளில் மாணவிகள் விழிப்புணர்வு பயணம்
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பயணமாக மாங்குரோவ் காடுகளில் மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பயணமாக மாங்குரோவ் காடுகளில் மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக்
புதுவை முருங்கப்பாக்கம் கைவினை கிராமம் அருகே வில்ஸ் தனியார் படகு இல்லம் உள்ளது. இங்கு 10 நபர்கள் பயணிக்கும் 4 மோட்டார் படகுகள், 2 நபர்கள் பயணிக்கும் 6 துடுப்பு படகுகள் உள்ளன.
இதன் மூலம் சுற்றுலா பயணிகள் அரியாங்குப்பம் ஆறு வழியாக மாங்குரோவ் காடுகள் (சதுப்புநில காடுகள்), தேங்காய்திட்டு துறைமுகம், தேங்காய்திட்டு முகத்துவாரம் ஆகிய பகுதிகளுக்கு படகு சவாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பொதுமக்களால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக கடலில் ஏற்படும் மாசு மற்றும் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருவதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அங்குள்ள படகு ஓட்டுனர்கள் திட்டமிட்டனர்.
அதன்படி இளம் தலைமுறையினரிடம் இருந்து இதை தொடங்குவது என முடிவு செய்து செயலில் இறங்கினர். அந்த வகையில் கல்லூரி நிர்வாகத்திடம் உரிய அனுமதி கடிதம் பெற்று வரும் மாணவர்களை கல்லூரி படகில் அழைத்துச் சென்று கடல் மாசு, மாங்குரோவ் காடுகளை பராமரித்தல், வலை விரித்து மீன்பிடிப்பது எப்படி? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என திட்டமிடப்பட்டது.
கல்லூரி மாணவிகள்
அதன்படி முதன் முதலாக நேற்று வில்லியனூர் கஸ்தூரிபா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 19 பேர் விழிப்புணர்வு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது அவர்களுக்கு வலைவீசி மீன் பிடித்தல், வலை பின்னுதல், சிக்கல் எடுத்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவிகள் ஆர்வமுடன் ஆற்றில் வலைவீசி மீன் பிடித்தனர்.
சதுப்பு நில காடுகளில் உள்ள மரங்களின் வகைகள், அவற்றை பராமரித்தல், பாதுகாத்தல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் பொருட்களை அதற்குரிய குப்பைத் தொட்டியில் போட வேண்டும். நீர்நிலைகளில் தூக்கி வீச வேண்டாம் என மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், மாங்குரோவ் காடுகள் பற்றிய விவரம், பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தும் மாசு, நேரடியாக வலைவீசி மீன்பிடித்த அனுபவம் இதெல்லாம் புது மாதிரியாக வித்தியாசமாக இருந்ததாக தெரிவித்தனர்.
பாராட்டு
தொடர்ந்து தினமும் வெவ்வேறு கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து மாங்குரோவ் காடுகளின் பயன்கள், பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்க வேண்டியதன் அவசியம், மீனவர்களின் வாழ்க்கை முறை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
படகு இல்ல உரிமையாளரான சஞ்சினி, மேலாளர் குமரன் ஆகியோரது ஒத்துழைப்புடன் படகு ஓட்டுனர்களான புதுவையை சேர்ந்த மீனவர்களான சித்தார்த், மதுபாலன், சுபாஷ் பிரித்திவிராஜ், ஹானஸ்ட் ராஜ், பிரபு, கபிலன், விஸ்வா, சத்தியராஜ், ரஞ்சித், ஜெயக்குமார், ஆதவன் ஆகியோரது இந்த முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story