மெரினா முகத்துவாரம் பகுதியில் மணல் எடுப்பதை தடுக்க கண்காணிப்பு கேமரா - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
மெரினா முகத்துவாரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீனவதந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தாக்கல் செய்த மனுவில், ‘கூவம் ஆறு கடலில் கலக்கும் மெரினா கடற்கரையின் முகத்துவாரத்தில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுகிறது. இதற்காக கனரக வாகனங்கள் சென்று வர அண்ணாசதுக்கம் பஸ்நிலையம் அருகில் குறுகிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கடலோர பாதுகாப்பு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் எடுக்க தடை உள்ளது. இதுபோன்ற பகுதிகளில் மணல் எடுப்பதை தடுக்க கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சில இடங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுகிறது. எனவே, கடலோர பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை கண்காணிக்க நிரந்தர குழுவை தலைமை செயலாளர் ஏற்படுத்த வேண்டும். அதில், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், புவியியல், சுரங்கத்துறை இயக்குனர், கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர், சென்னை கலெக்டர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் இடம்பெற வேண்டும். சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்க முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல பகுதிகளில் கனரக வாகனங்கள் சென்றால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story