“அன்பு, பாசம், தியாகம் ஆகியவை காவல்துறையின் இன்னொரு முகம்” - ககன்தீப்சிங் பேடி
ஆதரவற்றவர்களை மீட்பதற்காக துவங்கப்பட்ட ‘காவல் கரங்கள்’ அமைப்பின் முதலாமாண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை,
ஆதரவற்றவர்களை மீட்டு அவர்களுக்கு உதவி செய்வதற்காக சென்னை காவல்துறை ‘காவல் கரங்கள்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறது. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக நலத்துறை ஆகியவற்றோடு இணைந்து செயல்படும் இந்த அமைப்பின் முதலாமாண்டு நிறைவு விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் இணைந்து காவல் கரங்களின் சாதனை மலரை வெளியிட்டனர். பின்னர் ஆதரவற்றோருக்கு உணவு வழங்க நடிகர் சூர்யாவின் படத்தயாரிப்பு நிறுவனம் வழங்கிய வாகனம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி, கடலில் செல்லும் கப்பலில் தண்ணீருக்கு மேலே ஒரு பகுதியும் தண்ணீருக்கு கீழே ஒரு பகுதியும் இருப்பதைப் போல, காவல்துறையினருக்கு குற்றவாளிகளை பிடிப்பது, போக்குவரத்தை சரிசெய்வது என ஒரு முகம் இருந்தாலும், அன்பு, பாசம், தியாகம் போன்றவை காவல்துறையின் இன்னொரு முகமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் கரங்கள் அமைப்பால் இதுவரை 2 ஆயிரம் ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த அமைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story