மாணவர்கள் கலாட்டா : எங்கே செல்லும் இந்த பாதைதான் ...! ராகிங் அட்டகாசம் ; மாணவிகள் மடியில் படுத்திருக்கும் புகைப்படம்
மாணவர் சமுதாயம் எதை நோக்கி பயணிக்கிறது. இதன்விளைவு என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டாயாத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
சென்னை
கடந்த மாதம் அரசுப் பள்ளி மாணவிகள் பேருந்தில் மதுகுடித்து ஆட்டம் போட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் முன்பே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வகுப்பறையில் இருக்கையை மாணவர்கள் சேதப்படுத்தி அதனை செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ள மற்றொரு சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் உடன் படிக்கும் சக மாணவர்களிடம் ‘ராகிங்’ செய்த சம்பவம் பெற்றோர்களை மிரள வைத்துள்ளது.
வகுப்பறையில் 3 மாணவர்கள் தாதா போல உட்கார்ந்து இருக்க 10 பேர் அவர்களுக்கு தேர்வு அட்டையால் காற்று வீச செய்யச்சொல்லி ராக்கிங் செய்துள்ள வீடியோ பரவி வருகிறது. அதில் ஒரு மாணவரை பளார் என்று கன்னத்தில் அறையவும் செய்கிறார் மூத்த மாணவர்.
கல்லூரிகளில் தான் ராகிங் நடைபெறுவது வழக்கம். ஆனால் பள்ளியில் ராகிங் செய்வது புதுமையாக உள்ளது. பள்ளி பருவ மாணவர்கள் ஆசிரியர்களிடமும், வகுப்பறையிலும் ஒழுங்கீனமாக நடக்கும் செயல் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியதாக மாறிவிடும் அச்சுறுத்தல் நிலவுகிறது.
வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்தும்போது மாணவர்கள் ஒரு குழுவாக எழுந்து நின்று குத்தாட்டம் போட்ட சம்பவம் சமீபத்தில் வெளியானது. தலை முடியை ஒழுங்காக வெட்டி வா என்று ஆசிரியர், மாணவர்களை அறிவுறுத்தலினால் அவரை அடிக்க பாய்வது போன்ற செயல்கள் மாணவர் சமுதாயம் தடம் மாறி செல்கின்றதோ என்ற அச்சத்தை உணர்த்துகிறது.
ஆசிரியர்களை இன்றைய மாணவர் சமுதாயம் எதிரியாக பார்க்க காரணம் என்ன? அன்பையும், பண்பையும் விதைத்து நல்வழிப்படுத்தக்கூடிய ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோராக கருதப்படுகிறார்கள்.
இவை ஒருபுறம் இருக்க வகுப்பறையிலே மாணவர்கள் செல்போன் பார்ப்பதும், மாணவிகள் மடியில் மாணவர்கள் தலை சாய்த்து இருப்பது போன்ற படங்கள் வெளியாகி இருப்பது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மதிய உணவு நேரத்தில் இத்தகைய செயல்களில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள பள்ளியில் நடந்தது என்றால் நம்ப முடிகிறதா? செல்போன் மதிமயக்கத்தில் இன்றைய மாணவர் சமுதாயம் கிறங்கி கிடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாணவர் சமுதாயம் எதை நோக்கி பயணிக்கிறது. இதன்விளைவு என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேன்டிய கட்டாயாத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. பள்ளி மாணவர்களை வழிநடத்தக்கூடிய கல்வித்துறை மாணவர்களுக்கு தேவையான அடிப்படையான நெறிமுறைகளை கற்றுத்தர வேண்டும்.
Related Tags :
Next Story