மருத்துவ மாணவர்களுக்கு ‘டேப்லெட்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


மருத்துவ மாணவர்களுக்கு ‘டேப்லெட்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 26 April 2022 11:12 PM GMT (Updated: 2022-04-27T04:42:06+05:30)

தமிழகத்தில் மருத்துவம்-பல் மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘டேப்லெட்’ வழங்கினார்.

சென்னை,

2021-22-ம் ஆண்டு கல்வியாண்டில் மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 5,932 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கும், பல் மருத்துவ படிப்பில் 1,460 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இவர்களில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 445 பேர் மருத்துவ படிப்பிலும், 110 பேர் பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற்ற 555 மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை நடந்தது.

இந்த விழாவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு ‘டேப்லெட்’ வழங்கினார்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு

இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

கடந்த ஆண்டை காட்டிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுதலாக இந்தாண்டு மருத்துவ படிப்பில் படிக்கிறார்கள். அந்தவகையில் இந்தாண்டு 8,075 பேர் மருத்துவ கல்லூரிகளில் படிக்கிறார்கள். இதில் அகில இந்திய ஒதுக்கீட்டில் வருபவர்கள் 728 பேர். கடந்த வாரம் மருத்துவ படிப்பில் நடந்த மாணவர் சேர்க்கை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் திடீரென நிறுத்தப்பட்டது.

இந்த எதிர்பாராத உத்தரவால் அகில இந்திய இடஒதுக்கீட்டில் வரும் 24 மாணவர்களும், மாநில ஒதுக்கீட்டில் வரும் 18 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த மாணவர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகள் மூலமாக உரிய உத்தரவு தமிழக அரசுக்கு வந்தது. அதன் அடிப்படையில் அந்த 18 பேரும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். எனவே தமிழகத்தில் அரசு, தனியார், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் முழுமையான மாணவர் சேர்க்கை நடந்து முடிந்திருக்கிறது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகும்.

மாணவர்களுக்கு டேப்லெட்

கல்வி கட்டணம், புத்தகம் செலவு என ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு ஆகும் செலவு ரூ.1,61,028 ஆகும். அதேவேளை அனைவருக்கும் ஒரு கையடக்க கணினி தரவேண்டும். அந்த கையடக்க கணினியில் ஒட்டுமொத்த புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொடுத்தால், மாணவர்கள் வகுப்பறையில் படிக்க ஏதுவாக இருக்கும் என்று உத்தரவிட்டார். அதன்படி, இந்த கையடக்க கணினி இன்றைய தினம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மருத்துவ படிப்பு மட்டுமல்ல பொறியியல், சட்டம், வேளாண்மை, மீன்வளம் படிப்புகளிலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவந்த பெருமை இந்தியாவிலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தான் சாரும். அந்தவகையில் எப்படி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 555 பேருக்கு இந்த சேர்க்கை சாத்தியமாகி இருக்கிறதோ, அதேபோல பொறியியல், சட்டம், வேளாண்மை, மீன்வளம் படிப்புகளில் 7,200 பேர் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்றுள்ளார்கள். இந்த மாணவர்களுக்கு இந்தாண்டு ஆகும் செலவு ரூ.120 கோடி ஆகும். அடுத்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களும் வருவார்கள். வரும் ஆண்டுகளில் இந்த செலவு ரூ.240 கோடி, ரூ.360 கோடியாக உயரும்.

பேசும் நேரத்தை மிச்சப்படுத்தினால்...

முதல்-அமைச்சர் இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது எத்தனை பேருக்கு டேப்லெட் தர வேண்டும் என்று கேட்டார். 550 பேருக்கு என்று சொன்னோம். அப்படி என்றால், நான் நிகழ்ச்சியில் பேசவில்லை. நான் பேசும் நேரத்தையும் மிச்சப்படுத்தி 550 பேருக்கும் நான் கையடக கணினியை கொடுத்துவிட்டு போகிறேன். பேசும் நேரத்தை விட எல்லா மாணவர்களுக்கும் நான் நேரடியாக கொடுத்தால் அவர்களுக்கும் சந்தோஷம், எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று சொன்னார். ஆனால் நாங்கள் தயாராக இல்லாமல் போய்விட்டோம். பெயர்கள் பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு விட்டது. எனவே இன்று டேப்லெட் கிடைக்காத மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மூலம் வகுப்பறையில் நாளை அல்லது நாளை மறுநாள் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

செல்பி எடுத்து மகிழ்ச்சி

இந்த விழாவில் மாவட்டத்துக்கு 2 பேர் என்ற வீதம் (மயிலாடுதுறையில் மட்டும் ஒரு மாணவர்) 75 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘டேப்லெட்’ வழங்கினார். முதல்-அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். விழாவில் மருத்துவ மாணவ-மாணவிகள் சிலர் முதல்-அமைச்சருடன் உற்சாகமாக செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

முன்னதாக சில மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புத்தகங்களை நீட்டி ‘ஆட்டோகிராப்’ கேட்டனர். அப்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று எழுதி அவர் தனது கையெழுத்திட்டு கொடுத்தார்.

Next Story