திரையுலக சாதனையாளர்களுக்கு கலைஞர் பெயரில் புதிய விருது - அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு


திரையுலக சாதனையாளர்களுக்கு கலைஞர் பெயரில் புதிய விருது - அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 April 2022 4:06 PM IST (Updated: 27 April 2022 4:06 PM IST)
t-max-icont-min-icon

திரையுலக சாதனையாளர்களுக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ என்ற விருது வழங்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டப்பேரவையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இறுதியாக அமைச்சர் சாமிநாதன், 15 துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். 

அதில் முக்கியமாக தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரில் ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ என்ற விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் தேதி இந்த விருது வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

அதே போல், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில், மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்களுக்கு உணவு அருந்தும் அறை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும், தமிழ்நாடு திரைப்படத்துறையின் புதிய மின்னணு வீடியோ ஆவண காப்பகத்தில், மீதமுள்ள கேசட்டுகள் கணிணி மயமாக்கப்படும், பத்திரிக்கையாளர் ஓய்வூதிய திட்டத்திற்கான பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமானத்திற்கான உச்சவரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட 15 துறை சார்ந்த அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டுள்ளார். 

Next Story