தஞ்சை தேர் விபத்து: துயரத்தை சிலர் அரசியலாக்க நினைக்கிறார்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
தஞ்சை தேர் விபத்து சம்பவம் குறித்து அறிந்ததும், மீட்பு பணிகளை உடனடியாக செய்ய உத்தரவிட்டேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தஞ்சை,
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கோர விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியையும் வழங்கினார்.
பிறகு, விபத்தில் பலத்த காயமடைந்த எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம் (10), எம். நித்தீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி. கௌசிக் (13) ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற மு.க. ஸ்டாலின், காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்து தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையையும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து தஞ்சையில் நடந்த தேர் விபத்து குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த துயரத்தை விளக்க வார்த்தைகளே இல்லை. 11 பேர் குடும்பங்களின் துயரத்தில் மண்ணின் மைந்தன் என்ற முறையில் நானும் பங்கெடுக்கிறேன். திருவிழாவில் 11 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தகவலை அறிந்து துடிதுடித்துப்போனேன்.
தூற்றுவோர் பற்றி நான் கவலைப்படுவதில்லை, மக்களோடு மக்களாக இருப்பவன் நான். தஞ்சை களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த துயரத்தை சிலர் அரசியலாக்க நினைக்கிறார்கள். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சம், காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ 50,000 வழங்கப்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்ததும், மீட்பு பணிகளை உடனடியாக செய்ய உத்தரவிட்டேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐஏஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் துறை முதன்மை செயலாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story