தங்கையை திருமணம் செய்துவைப்பதாக கூறி... பெண் குரலில் பேசி கனடா என்ஜினீயரிடம் ரூ.1½ கோடி மோசடி


தங்கையை திருமணம் செய்துவைப்பதாக கூறி... பெண் குரலில் பேசி கனடா என்ஜினீயரிடம் ரூ.1½ கோடி மோசடி
x
தினத்தந்தி 27 April 2022 6:57 PM IST (Updated: 27 April 2022 6:57 PM IST)
t-max-icont-min-icon

தங்கையை திருமணம் செய்துவைப்பதாக கூறி, தங்கையை போல பெண் குரலில் பேசி கனடாவில் வேலை செய்யும் என்ஜினீயரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த பட்டதாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 42). என்ஜினீயரான இவர் கனடா நாட்டில் உள்ள ஆயில் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பச்சையப்பன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.

அவர்கள் விவாகரத்து செய்துகொள்ள முடிவெடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் பச்சையப்பன் 2-வது திருமணம் செய்ய தீர்மானித்து திருமண இணையதளம் ஒன்றில் விளம்பரம் கொடுத்தார். விவாகரத்தான அல்லது கணவரை இழந்த விதவைப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக விளம்பரத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

அதைப்பார்த்து, சென்னை பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்த செந்தில் பிரகாஷ் (42) என்பவர் பச்சையப்பனை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். தனது தங்கை விதவை என்றும், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதித்துவிட்டதாகவும் கூறினார். தனது தங்கையிடம் பேசுங்கள் என்று செல்போனில் தெரிவித்துள்ளார். ஆனால் செந்தில் பிரகாஷே தங்கையை போல பெண் குரலில் பேசி உள்ளார். தனது தங்கை என்று ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளார். அதை பார்த்த பச்சையப்பன் உண்மை என்று நம்பியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில், செந்தில் பிரகாஷ் தனது தங்கை பேசுவது போல பெண் குரலில், பச்சையப்பனிடம் பணம் கேட்டுள்ளார். அவரும், தான் திருமணம் செய்யப்போகும் பெண்தானே என்று நம்பி, பண உதவி செய்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக ரூ.1½ கோடி வரை வங்கி பரிவர்த்தனை மூலம் பணம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் பச்சையப்பன் சென்னை வந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். செந்தில் பிரகாசிடம், உங்கள் தங்கையை நேரில் பார்க்க வேண்டும், அவருக்கு நிறைய பரிசுப்பொருட்கள் வாங்கி வந்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.

உடனே, பச்சையப்பன் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு செந்தில் பிரகாஷ் சென்றுள்ளார். அங்கு பச்சையப்பனை மிரட்டி, அவர் வாங்கிவந்த எலக்ட்ரானிக் பரிசுப்பொருட்களை அபகரித்து சென்றுவிட்டார். அப்போதுதான், செந்தில் பிரகாஷ் பெண் குரலில் பேசி மோசடி செய்தது தெரியவந்தது. செந்தில் பிரகாசுக்கு தங்கை யாரும் இல்லை என்பதும், அவர் பண மோசடிக்காக அவ்வாறு கபட நாடகம் ஆடியதும் அம்பலமாயின.

இந்த நிலையில் பச்சையப்பன் தனது மனைவியுடன் கோர்ட்டில் சமரசமாக பேசி மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த பச்சையப்பன், செந்தில் பிரகாசின் மோசடி பற்றி ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில், ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் பசுபதி மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

அதில் செந்தில் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். பச்சையப்பனிடம் அவர் அபகரித்துச்சென்ற எலக்ட்ரானிக் பரிசுப்பொருட்களை போலீசார் மீட்டனர். பச்சையப்பனிடம் மோசடி செய்த பணத்தை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

கைதாகியுள்ள செந்தில் பிரகாஷ் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து நிறைய பணத்தை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதை சரிகட்ட பச்சையப்பனிடம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. செல்போன் பேச்சை கேட்டும், பெண்ணின் புகைப்படத்தை மட்டும் பார்த்தும் உண்மை என்று நம்பி பணத்தை இழந்த இந்த சம்பவத்தை அனைவரும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story