தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை


தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 28 April 2022 1:19 AM IST (Updated: 28 April 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

நடைப்பயிற்சி சென்றபோது தி.மு.க. நிர்வாகி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் மாவட்டம் கோணசமுத்திரம் கன்னியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 55). தி.மு.க. மாவட்ட பிரதிநிதியான இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தினமும் கன்னியம்பட்டி பகுதியில் உள்ள தனது வயலுக்கு செல்லும் வழியில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் நடைப்பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த கந்தனின் உறவினர்களான, செட்டி என்பவரின் மகன் மணிகண்டன் (35) மற்றும் சின்னபையன் (50) ஆகிய இருவரும் அவரை வழிமறித்தனர்.

வெட்டிக்கொலை

பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கந்தனின் கழுத்து மற்றும் வயிறு என பல இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த கந்தன் அலறியபடி ஓட முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மணிகண்டன் மற்றும் சின்னபையனை கற்களை வீசி விரட்டினர். உடனே அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.இதையடுத்து வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கந்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தன் பரிதாபமாக இறந்தார்.

முன்விரோதம்

போலீஸ் விசாரணையில் கந்தனுக்கும், மணிகண்டன் மற்றும் சின்னபையனுக்கும் இடையே வழித்தட பிரச்சினை, தேர்தலின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் சின்னபையனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story