தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி?


தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி?
x
தினத்தந்தி 28 April 2022 5:25 AM IST (Updated: 28 April 2022 5:25 AM IST)
t-max-icont-min-icon

11 பேரை பலி வாங்கிய தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

தஞ்சாவூர்,

தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அப்பர் மடத்தில் இருந்து புறப்பட்ட தேர் களிமேடு பகுதியில் உள்ள வீடுகள்தோறும் சென்று விட்டு மீண்டும் மடத்துக்கு திரும்பி வருவதற்காக தேரை திருப்பி உள்ளனர். தேரின் பின்னால் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு இருந்ததால் தேரை பின்நோக்கி தள்ளுவதற்கு சிரமமாக இருந்துள்ளது.

இதனால் தேரை கொஞ்சம் முன்னோக்கி இழுத்தபோது, எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் தேரின் மேல்பகுதி உரசியது. தேரின் அலங்காரத்திற்கு இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்பட்டு இருந்ததால் உடனடியாக மின்சாரம் கீழே வரை வேகமாக பரவியது.

தேரின் மேற்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததுடன் மையப் பகுதியில் பட்டாசு போன்று வெடித்து சிதறியது. மேலும் தேரில் இருந்தவர்கள், தேரின் அருகே இருந்தவர்கள் குருவிகள் செத்து விழுவதை போல் கீழே விழுந்தனர். இதைப் பார்த்து சிலர் தேரை நோக்கி ஓடினர். அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் கீழே விழுந்தனர்.

ஒருவர், இருவர் அல்ல மொத்தம் 28 பேர் மீது மின்சாரம் தாக்கியது. இவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஒருவரும் என 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கவனக்குறைவால் பெரும் விபத்து

தேரின் அலங்கார மேல்பகுதி மடக்கி கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதாவது கேபிள் வயர், மின் வயர், மின் கம்பி ஆகியவை வரும்போது அலங்காரத்தின் மேல் பகுதியை மடக்கிக்கொள்ளும் வசதி உள்ளது.

தேரை திருப்பியபோது இந்த அலங்கார மேற்பகுதியை மடக்கி இருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம். ஆனால் சிறிய கவனக்குறைவின் காரணமாக பெரும்விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 93 ஆண்டுகளாக எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்த விழாவில் இந்த ஆண்டு பெரிய அசம்பாவிதம் நடந்துள்ளது. அந்த கிராமத்தினரை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

Next Story