மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம்: அரசாணை 354-ஐ நிறைவேற்ற வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க அரசாணை 354-ஐ நிறைவேற்ற வேண்டும் மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடக பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ, அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க, தமிழக சட்டசபையில் நாளை நடக்கும் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின் போது, அரசாணை 354 ஐ செயல்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இந்த அரசு அமைந்ததில் இருந்து இன்று வரை கொரோனா 2-வது அலையை வெற்றிகரமாக கையாண்டோம் என்று சொல்வதற்கு மிக முக்கிய பங்கு அரசு மருத்துவர்களையே சாரும். ஆனால், அவர்களின் நிலை வருத்தம்கொள்ள செய்கிறது.
அரசு மருத்துவர்கள் கடந்த ஆட்சியில் தகுதிக்கு ஏற்ப ஊதியத்திற்கு போராடிய போது அவர்களுக்கு துணை நிற்பதாக சொல்லி, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அவை நிறைவேற்றப்படும் என பல துறைகளில் கொடுத்த வாக்குறுதி போல் இவர்களுக்கும் திமுகவால் வழங்கப்பட்டது. ஆயினும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பது போல் தொடர்ச்சியாக மருத்துவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலையே உள்ளது.
ஒரு பக்கம் நீட் தேர்வை எதிர்த்து சமூகநீதி சார்ந்து மருத்துவர்களை உருவாக்க தொடர்ச்சியாக போராடி வரும் அரசு, இன்னொரு பக்கம் அதே மருத்துவர்களை வதைப்பது சரியல்ல.
மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்று மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன. பல லட்சம் உயிர்களை காப்பாற்றுபவர்களுக்கு இதை நிச்சயம் செய்ய வேண்டும். மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்துள்ள இந்த அரசு அவர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையையும் சேர்த்து நிறைவேற்றுவதே அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story