தேரோட்ட வீதிகளில் உள்ள மின்கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவில் தேரோடும் வீதிகளில் உள்ள மின்கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் சதயவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மேல் தேர் புறப்பாடு நடந்தது. கிராமத்தில் உள்ள வீதிகளில் தேர் வலம் வந்தது. நேற்று அதிகாலை 3.10 மணி அளவில் தேர் கீழத்தெரு பகுதிக்கு சென்று திரும்பிய போது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தேரின் அலங்கார தட்டி உரசியது.
இதன் காரணமாக தேர் மீது மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தேரில் அமர்ந்து இருந்த பூசாரி உள்பட சிறுவர்களும், தேரை சுற்றி நின்றவர்களும் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்ததால் அவற்றில் மின்சாரம் பாய்ந்து ஆங்காங்கே நின்றவர்களும் சுருண்டு கீழே விழுந்தனர்.
அப்போது தான், விபரீதத்தை உணர்ந்த மக்கள் தேரின் அருகே செல்லாமல், உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததுடன் மின்சாரத்தையும் நிறுத்தினர். இந்த விபத்தில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்தான்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் களிமேடு கிராமத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சட்டசபையில் அறிவித்தபடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்கினார்.
இந்த தஞ்சை களிமேடு மின்சார விபத்து விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், திருவாரூர் உள்பட 3 கோவில் தேரோடும் வீதிகளில் உள்ள மின்கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இனி தேரோட்ட வீதிகளில் உள்ள மின்கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story