ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி


ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 28 April 2022 10:31 PM IST (Updated: 28 April 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பா.ஜ.க. பிரமுகர்
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 69). பா.ஜ.க. பிரமுகரான இவர் ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் வைத்திலிங்கம் பி.பி.எம். படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக மளிகை கடையில் உள்ளார்.
பிரபாகர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்க முயற்சித்து வந்தார். இதுபற்றி ரெட்டியார்பாளையம் ஜான்சி நகரை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் செல்வத்திடம் தெரிவித்தார். 
இதையடுத்து அவர் மேட்டுப்பாளையம் தர்மாபுரியை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் ஜிப்மர் இயக்குனரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார். அவரை தனக்கு நன்றாக தெரியும் என்பதால் அவர் மூலம் வைத்திலிங்கத்திற்கு ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இந்தநிலையில் மணிகண்டன், கடந்த ஜனவரி மாதம் பிரபாகரை சந்தித்து ஜிப்மரில் 3 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதில் ஒரு இடத்தை உங்கள் மகனுக்கு வாங்கி தருகிறேன். அதற்கு ரூ.17 லட்சம் ஆகும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய பிரபாகர் முன்பணமாக ரூ.3½ லட்சம் கொடுத்துள்ளார். அதன்பின் பல்வேறு தவணைகளாக ரூ.17 லட்சம் வழங்கினார்.
போலி சேர்க்கை ஆணை
இந்தநிலையில் பிரபாகர் தனக்கு தெரிந்த நண்பர்களை மணிகண்டனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் மகன், மகள்களுக்கும் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் இருந்து மணிகண்டன் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
அதன்பின் வைத்திலிங்கம் தவிர மற்ற 4 பேருக்கு மணிகண்டன் சேர்க்கை ஆணையை கொடுத்துள்ளார். ஆனால் வைத்திலிங்கத்திற்கு கொடுக்கவில்லை. இதுபற்றி பிரபாகர் கேட்டபோது, இன்னும் ரூ.3 லட்சம் தரவேண்டும் என்று மணிகண்டன் கூறியுள்ளார்.
இதற்கிடையே சேர்க்கை ஆணை பெற்ற 4 பேரும் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு இருந்த அதிகாரிகள், சேர்க்கை ஆணையை வாங்கி பார்த்துவிட்டு, இது போலியானது. இங்கு யாரையும் தற்போது வேலைக்கு எடுக்கவில்லை என்று கூறினர்.
2 பேர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பிரபாகரிடம் முறையிட்டனர். அவர் மணிகண்டனை தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான பதில் இல்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரபாகர், ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மணிகண்டன் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கவில்லை என்பது தெரியவந்தது. இந்தநிலையில் அங்கு வேலை வாங்கி தருவதாக 5 பேரிடம் சுமார் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மடுவுபேட் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (37) என்பவரின் உதவியுடன் மணிகண்டன் போலியாக சேர்க்கை ஆணையை தயார் செய்து வழங்கியதும் தெரியவந்தது. 
இதையடுத்து மணிகண்டன், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் வேறு யாரிடமாவது இதுபோல் மோசடி செய்துள்ளார்களா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story