மேலும் 26 பேருக்கு தொற்று சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு


மேலும் 26 பேருக்கு தொற்று சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 April 2022 5:40 AM IST (Updated: 29 April 2022 5:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐ.ஐ.டி.யில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 19-ந் தேதி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஊழியர்கள் 6 ஆயிரத்து 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள் வரத்தொடங்கியுள்ளது. இதனால், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஐ.டி. வளாகத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில், 3 ஆயிரத்து 782 மாதிரிகளின் முடிவுகள் இதுவரை வந்துள்ளது.

13 பேர்

அதில் 171 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் 26 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் தணிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஐ.ஐ.டி. வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 13 பேர் தற்போது குணமடைந்துள்ளனர். மற்ற 158 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, அங்கு நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அங்கு எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேவையான அறிவுரையும் வழங்கினார்.

ஒருவருக்கு டெங்கு

இந்நிலையில், ஐ.ஐ.டி வளாகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவருக்கு ‘டைபாய்டு’ காய்ச்சல், ஒருவருக்கு சின்னம்மை பாதிப்பும் ஐ.ஐ.டி. வளாகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகள் அனைத்தும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஐ.ஐ.டி. வளாகத்தில் டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மற்றவர்களையும் தீவிரமாக கண்காணிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story